யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்ற மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள ஆனைமலை, கடல் மட்டத்தில் இருந்து 2,513 மீட்டர் உயரம் கொண்டது.
100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேய அரசால் மரங்கள் வெட்டப்பட்டு, பொட்டல் காடாக காணப்பட்ட ஆனைமலையை அழகிய வனமாக மாற்றியவர் ‘ஹியூகோ பிரான்சிஸ் அன்றேவ் வுட்’ என்ற ஆங்கிலேய வன அலுவலர்.
18-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக ஓக் மரங்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. இங்கிலாந்தில் இருந்த வலிமையான ஓக் மரங்கள் முற்றிலும் வெட்டப்பட்ட நிலையில், கப்பல் கட்டுதல், தொழிற்சாலை, புதிய ரயில் பாதை அமைத்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக வலுவான மரங்கள் தேவைப்பட்டன.
அப்போது, ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் ஒரு பகுதியான ஆனைமலையில் பெருமளவில் ஓக் மரங்களைப் போன்ற வலிமையான தேக்குமரங்கள் இருப்பதை அறிந்து அவற்றை வெட்டிச் சாய்த்தனர்.
மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டதால், மழைப்பொழிவு குறைந்து, காட்டு விலங்குகள் குடிநீருக்காக மனிதர்களின் குடியிருப்புகளை நோக்கி வந்தன. காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு 1855-ல் காடுகளுக்கென தனித் துறையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆனைமலைத் தொடரில் அழிந்த வனப் பகுதியை மீட்டெடுக்கும் நோக்கில், மறுசீரமைப்பு பணிக்காக 1915-ம் ஆண்டு டாப்சிலிப் பகுதிக்கு ஹியூகோ வுட்டை அனுப்பினர். அவர் பணியில் சேர்ந்தவுடன், மரங்கள் வெட்டப்பட்ட காடுகளில் பயணம் செய்து, அரசுக்கு செயல்திட்டம் சமர்ப்பித்தார்.
தேக்கு மரங்களுக்கு நடுவே ஹியூகோ வுட்-டின் கல்லறை.
மரத்தை வேரோடு வெட்டாமல், நிலத்துக்கு மேலே ஒரு அடி விட்டு வெட்டுவது. 25 ஆண்டுகளைக் கடந்த மரங்களை மட்டும் வெட்டுவது. ஒரு மரத்தை வெட்டினால் நான்கு மரக்கன்றுகளை நடுவது என்ற, காடுகளைப் பாதுகாக்கும் இவரது திட்டத்தை ஆங்கிலேய அரசு ஆமோதித்தது.
ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களால் நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களைப் பழங்கு டியின மக்கள் உதவியுடன் செய்து, அதை அரசு அலுவலகங்களுக்கு விற்று, அதில் கிடைத்த பணத்தில் புதிய மரக்கன்றுகளை நடச் செய்தார். இங்கிலாந்தில் ஐ.எப்.எஸ். படித்த வுட், பங்களாவில் தங்காமல், டாப்சிலிப் அருகே உலாந்தி பள்ளத்தாக்கில் ‘மவுன்ட் ஸ்டுவர்ட்’ என்ற சிறிய வீட்டில் தங்கி, முறையான பாதை இல்லாத காடுகளில் பயணம் செய்து பணியாற்றினார்.
வேலை போக மீதி நேரம் தனியாக காடுகளில் நடந்து செல்லும் ஹியூகோ வுட், சட்டைப் பைகளில் எடுத்துச் செல்லும் தேக்கு விதைகளை, தனது வெள்ளிப் பூண் போட்ட ஊன்றுகோலால் நிலத்தில் குத்தி, அந்தக் குழியில் ஒரு தேக்கு விதையை விதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படி பல ஆண்டுகள் நடந்து நடந்து இவர் விதைத்த தேக்கு மரங்கள் இன்று டாப்சிலிப் பகுதியில் வானுயர்ந்து நிற்கின்றன.
என்னைக் காண விரும்பினால்…
ஓய்வுபெற்ற வனஅலுவலர் வ.சுந்தரராஜூ கூறும்போது, “திருமணம் செய்து கொள்ளாத ஹியூகோ வுட், காடுகளின் நலனுக்காக வாழ்ந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு குன்னூரில் வசித்தவர், 1933-ல் மறைந்தார். “நான் மிகவும் நேசித்த ஆனைமலைக் காட்டில், அடர்ந்த மரங்களுக்கு நடுவே என் உடலைப் புதைக்க வேண்டும்” என உயிலில் அவர் தெரிவித்திருந்தபடியே, ‘மவுன்ட் ஸ்டுவர்ட்’ வீட்டுக்கு அருகில், அவரால் உருவாக்கப்பட்ட தேக்கு மரங்களுக்கு நடுவே உடல் புதைக்கப்பட்டது. அவரது கல்லறை மீது, “என்னைக் காண விரும்பினால், சுற்றிலும் பாருங்கள்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆம், ஓங்கி உயர்ந்த மரங்களின் ஜீவனாக அவர் இன்றும் வாழ்கிறார்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago