பழைய ஓய்வூதியத் திட்டம் 6 மாநிலங்களில் அமல்; தமிழகத்தில் எப்போது? - ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: இமாச்சலப் பிரதேசத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையாகிறது, அது தவிர, 6 மாநிலங்களில் சாத்தியமானது தமிழகத்தில் எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இமாலயப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்ட காங்கிரஸ் தலைவர் சுக்விந்தர்சிங் சுகு, இமாலய பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதாக இமாலயப் பிரதேச முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இமாலயப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுக்விந்தர்சிங் சுக்கு நேற்று பதவியேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இமாலயப் பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்று சுக்விந்தர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த இரு வாரங்களுக்குள் இமாலய பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது; பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும்; நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் முறியடித்து இராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்கு வங்கம் என 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாலயப் பிரதேசம் அதனை இணைத்துக் கொண்டுள்ளது.

இமாலய சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிவிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இமாலயப் பிரதேச அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், இமாலயப் பிரதேசத்தில் இதுவரை புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒன்றரை லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்.

தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வாக்குறுதி அளித்த எந்த கட்சியும் அதை செயல்படுத்துவதில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. அதன்பின் 03.08.2017-ஆம் தேதி மூத்த இ.ஆ.ப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் ஏன் செயல்படுத்த முடியாது? பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்து விட்டது. இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்