’புயலையே சந்திக்கும் ஆற்றல் இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது’ - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: புயலையே சந்திக்கும் ஆற்றல் இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இன்று (11-12-2022) காலை சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் முதல்வர் பேசியதாவது, “ திராவிட மாடல் ஆட்சியை பற்றி இங்கே பலர் பேசுகிறபோது மழையை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்கள். மூன்று நாட்களாக பெய்த மழை - புயல் அதெல்லாம் எப்படி சமாளித்தோம், அதில் என்ன பெயர் கிடைத்திருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள்.

இரண்டு நாட்களாக பார்க்கிறவர்கள் எல்லாம் இதைத்தான் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம் ஆட்சிக்கு வந்தபோது என்ன நிலை, ஒரு பெரிய கொடிய தொற்று நோய் ‘கரோனா‘ இருந்தது. அதிலிருந்து மீண்டோம். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மா.சுப்பிரமணியன் மட்டும் மருத்துவத் துறை அமைச்சர் அல்ல, முதலமைச்சரிலிருந்து அனைவரும் மருத்துவத் துறை அமைச்சராக மாறினோம். அதனால்தான் அதைக் கட்டுப்படுத்த முடிந்தது.

அது முடிவதற்கு முன்னாலேயே, வெள்ளம் வந்தது. பெரிய மழை வந்தது. அதையும் சமாளித்து அதிலும் வெற்றி கண்டோம். இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்றால், இதைத்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றார். ‘உழைப்பு... உழைப்பு... உழைப்பு‘தான் நம்முடைய மூலதனமாக இருக்க வேண்டும். அதைத்தான் ஸ்டாலினிடத்தில் நான் பார்க்கிறேன் என்று சொன்னார்.

எனவே அந்த உழைப்பை பயன்படுத்திதான், நான் மட்டுமல்ல - அமைச்சர்கள் மட்டுமல்ல - சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல - நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல - உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மட்டுமல்ல - நம்முடைய கழகத் தோழர்கள் – இந்த இயக்கம் வளர வேண்டும் வாழ வேண்டும் என்று இரத்தம் சிந்தி உயிரை அர்ப்பணித்து போராடிக் கொண்டிருக்கிறார்களே அவர்களும் இதில் இணைந்து கொண்டு இன்றைக்கு பணியாற்றியிருக்கிற காரணத்தால்தான் இன்றைக்கு நாம் கம்பீரமாக மக்களிடத்தில் செல்ல முடிகிறது.

நேற்றிலிருந்து தொலைபேசியை வைக்கவே முடியவில்லை. எல்லோரும் அழைத்து, ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள்... ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள் என்று பாராட்டினார்கள். சமூக வலைதளங்களில் பார்த்தீர்கள் என்றால் எல்லாம் பாராட்டுகள்தான் வந்து கொண்டிருக்கிறது.

இங்கேகூட அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பேசுகிறபோது சொன்னார். ‘நம்பர் ஒன்’ முதலமைச்சர் என்று பாராட்டினார். ‘நம்பர் ஒன்’ முதலமைச்சர் என்பதை எனக்கு அதிகமான பெருமையாகவோ பாராட்டாகவோ நினைக்கவில்லை. என்றைக்கு ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று வருகிறதோ அன்றைக்குத்தான் எனக்குப் பெருமை. அதையும் நிறைவேற்றுவான் இந்த ஸ்டாலின் என்பதை இந்த நேரத்தில் உறுதியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்‘. அதனால் அதையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில் நான் நிறைவாகச் சொல்ல விரும்புவது, நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுகள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் தமிழுக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் எவ்வாறெல்லாம் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைக்கு இந்தத் திருமணம் சுயமரியாதை உணர்வோடு நடக்கிறது என்றால், இது வெறும் சுயமரியாதைத் திருமண மட்டுமல்ல, சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, தமிழ்த் திருமணம். அதையும் மறந்து விடக்கூடாது.

இந்தத் தமிழுக்குதான் தலைவர் கலைஞர் அவர்கள் செம்மொழி என்கிற அங்கீகாரத்தை பெற்று தந்திருக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட இந்த அழகான தமிழ் மொழியில் பெயர் சூட்டுங்கள்.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், ‘வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்’ வாழுங்கள்... வாழுங்கள்... வாழுங்கள்... என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்” என பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்