உள் தமிழகத்தில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - 12 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் உள் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை நிலை கொண்டிருந்த ‘மேன்டூஸ்’ புயல், சனிக்கிழமை அதிகாலை மாமல்லபுரத்துக்கு அருகே கரையைக் கடந்தது. அது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகக் கூடும்.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11, 12, 13 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களி லும், 14-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 11-ம் தேதி (இன்று) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கம் ஆகியஇடங்களில் தலா 20 செ.மீ., காஞ்சிபுரத்தில் 19 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 18 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: லட்சத்தீவு பகுதிகள், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 12, 13-ம் தேதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE