சென்னை: வங்கக் கடலில் நிலவிய ‘மேன்டூஸ்' புயல் நேற்று அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் பாதிப்பால் 6 பேர் உயிரிழந்தனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தமான் அருகே கடந்த 5-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கடந்த 7-ம் தேதி 'மேன்டூஸ்' புயலாக வலுவடைந்தது. பின்னர், கடந்த 8-ம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெற்று, 9-ம் தேதி மீண்டும் புயலாக வலு குறைந்தது.
புயல் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதலே பலத்த காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. நேற்று அதிகாலை 3 மணியளவில் முழுவதுமாக கரையைக் கடந்தது. அப்போது சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் 70 கி.மீ. வேகத்தில் பலத்த சப்தத்துடன் சூறாவளிக் காற்று வீசியது.
» விவசாயி செம்புலிங்கத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்; அரியலூரில் நாளை ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை
» “சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” - ஜெயக்குமார்
பலத்த காற்றால் சென்னையில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றில் 150 மரங்கள், மின் கம்பங்கள் மீது விழுந்தன. மாநகராட்சி, மின்சாரம், தீயணைப்புப் படை, காவல் துறையினர் இணைந்து மரங்களை அகற்றினர். புயல் மற்றும் மழையால் நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். 98 கால்நடைகள் இறந்துள்ளன. 181 வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்துள்ளன. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.
புயலால் வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்காவில் ஏற்பட்ட சேதங்களையும், அவற்றைச் சீரமைக்கும் பணிகளையும் வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் மற்றும் பணப்பாக்கத்தில் தலா 20 செ.மீ., காஞ்சிபுரத்தில் 19 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 18 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 17 செ.மீ., திருத்தணி, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ., சென்னை அயனாவரம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தலா 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: புயல், கனமழையால் பாதிக்கப் பட்ட காசிமேடு மீன்பிடித் துறை முகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், சேதமடைந்த படகுகளைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்.பி. கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தனர். பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம்கூறியதாவது:
தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக மேன்டூஸ் புயல் தாக்கு தலிலிருந்து தமிழகம், குறிப்பாக சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது. சென்னையில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். ஏறத்தாழ 5,000 பணியாளர்கள் இரவு முழுவதும் நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. இவ்வளவு அதிக மழை பெய்திருந்தாலும், பெருமளவு சேதம் ஏற்படாமல் அரசு தடுத்துள்ளது.
கனமழையால் ஏற்பட்ட சேத விவரங்கள் முறையாகக் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. 201 நிவாரண முகாம்களில், 3,163 குடும்பங்களைச் சேர்ந்த 9,130 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தந்த மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகளைச் ேர்ந்த 496 வீரர்கள், 14 குழுக்களாக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேதாரங்களைச் சீரமைக்கும் பணியில் 25,000 பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். 900 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்ட நிலையில், 300 மோட்டார்கள்தான் பயன்படுத்தப்பட்டன. சென்னையில் 22 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. அதனால் வாகனப் போக்குவரத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை.
மக்களின் பாதுகாப்பு கருதி 600 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும், நேற்று பிற்பகலுக்குள் 300 இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்பட்டது. இதர இடங்களிலும் அவற்றைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சேத மதிப்பீடு கணக்கெடுப்பு வந்தவுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்படும்.
முன்கூட்டியே திட்டமிட்டால், எந்தப் பேரிடரையும் எதிர்கொள்ள லாம் என்பதை தமிழக அரசு நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இந்தப் பணியில் முழுமையாக ஈடுபட்ட அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், குறிப்பாக துப்புரவுப் பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
புயல் பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், தேவைப்பட்டால் மத்திய அரசிடம் உதவி கேட்போம். பாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகை வழங்குமாறு மீனவர்கள் கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.
விசைப்படகுகள் மட்டும்தான் கணக்கெடுக்கப்பட்டதாகவும், ஃபைபர் படகுகள் கணக்கெடுக்கப்படவில்லை என்றும் கூறுவதில் உண்மை இல்லை. அது தவறான குற்றச்சாட்டு.
மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் களத்தில் உள்ளனர். தேவை ஏற்பட்டால் நானும் பிற மாவட்டங்களுக்கு நிச்சயம் செல்வேன்.
எவ்வளவு தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் வரவில்லை. முழுமையான கணக்கெடுப்பு வந்தபின், இழப்பீடு குறித்து தெரிவிக்கிறேன். அரசின் செயல்பாடுகளில் மக்கள் திருப்தியாக இருப்பது மட்டுமின்றி, முழு ஒத்துழைப்பும் வழங்குகின்றனர். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago