ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் பெற சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்: மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி தகவல் 

By கி.மகாராஜன்

மதுரை: ‘பொதுமக்கள் ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் பெற இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்’ என மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி ஏ.ராபின்சன் ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுரையில் உலக எய்ட்ஸ் தின விழா அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி ஏ.ராபின்சன் ஜார்ஜ் பேசியதாவது: “நாட்டில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களை மக்கள் தெரியாமல் போனால் சட்டத்தின் பலனை அடைய முடியாது. இதனால் சட்டம் குறித்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வறுமை காரணமாக வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இலவசமாக வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டப்படி அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும். எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்களை சமமாக பாவிக்க வேண்டும். எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்கள் தேவையை நிறைவேற்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உதவி செய்யப்படுகிறது. எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்கள் குறைகள் இருந்தால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி பரிகாரம் பெறலாம்.

சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த பணிகள் மட்டும் இல்லாமல் சட்டம் சாரா பணிகளையும் மேற்கொள்கிறது. ரேஷன் கார்டு வாங்க, முதியோர் ஓய்வூதியம் பெற, அரசு அலுவலகங்களில் கொடுக்கப்பட்ட மனு மீது தீர்வு கிடைத்திடவும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் மனு அளிக்கலாம். இந்த மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடமும் பொதுமக்கள் மனு அளிக்கலாம்” என்று சார்பு நீதிபதி பேசினார்.

முன்னாள் முதன்மை மாவட்ட நீதிபதி ஜான்.டி.சந்தோசம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கே.வி.அர்ஜூன்குமார், மருத்துவ அலுவலர் செல்வராஜ் மனோகரன், மூத்த வழக்கறிஞர் எஸ்.மோகன்தாஸ், எம்.பிரதீபன், ஜெயகுமார், அய்யப்பன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்ட திட்ட மேலாளர் பி.ஜெயபாண்டி வரவேற்றார். முடிவில் ரவிக்கண்ணன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE