ஆளுநரை ஆன்லைன் விளையாட்டு நிறுவன சிஇஓக்கள் சந்தித்தது பற்றி தெரியாது: அண்ணாமலை

By செய்திப்பிரிவு

திருச்சி: “ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சிஇஓக்கள் தமிழக ஆளுநரை ஏன் சந்தித்தனர்? இந்தச் சந்திப்பினால் ஆளுநரின் மனது மாறப்போகிறதா?” என்று எங்களுக்குத் தெரியாது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருச்சியில் சனிக்கிழமை பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தமிழக ஆளுநரைச் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பாஜகவின் தீர்க்கமான கருத்து ஆன்லைன் விளையாட்டுக்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய அபாயம் இருக்கிறது.

கடந்த முறை நான் ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்தபோது, அவரிடம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை விரைவில் தடை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பாஜக சார்பில் என்னுடன் வந்த தலைவர்களும் வலியுறுத்தினோம். மாநில அரசுடன் அதுதொடர்பான விளக்கத்தைக் கேட்டு சரிசெய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பட்டியலில் உள்ள 31-வது பிரிவு அதிகாரத்தை மாநில அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. அதை பாஜக ஏற்றுக்கொள்ளாது. சைபர் ஸ்பேஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்டது, அதில் மாநில அரசு சட்டம் இயற்றுகின்றனர். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எனவே வல்லுநர் குழுவைக் கொண்டு சரி செய்ய வேண்டும் என்று கூறினோம். ஆளுநர் தரப்பில் இருந்து என்ன சொன்னார்கள் என்று, அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். இதுதான் எங்களுக்குத் தெரியும்.

ஆளுநரை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சிஇஓக்கள் ஏன் சந்தித்தனர், இந்தச் சந்திப்பினால் ஆளுநரின் மனது மாறப்போகிறதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆன்லைன் விளையாட்டுக்கள் தமிழகத்தில் முறைப்படுத்தப்பட வேண்டும். தடை செய்ய வேண்டும். பிராக்ஸி சர்வரைப் பயன்படுத்தி விளையாடினால் என்ன செய்வது. இது ஒரு சிக்கலான பிரச்சினை. எனவே இந்த விவகாரத்தில் வேகமாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

அப்போது தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் வெளியீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இன்னும் கொஞ்ச நாட்களில் அடுத்தக்கட்ட பட்டியலை வெளியிடப்போகிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆரம்பத்தில் பாஜக சார்பில் ஊழல் என்றபோது, நாங்கள் மட்டும் குற்றம்சாட்டுவதாக கூறப்பட்டது. 6 மாதங்களுக்குப் பிறகு, இன்று சாமானிய மக்கள் பேசும் அளவிற்கு ஊழல் பெருகியிருக்கிறது. அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பொறுப்புள்ள கட்சியாக செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். அடுத்தக்கட்ட பட்டியலை நாங்கள் வெளியிட இருக்கிறோம். இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE