திருவண்ணாமலை: மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஆயிரம் வாழை மரங்கள் மற்றும் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் ஜமுனாமரத்தூர் (ஜவ்வாதுமலை) வட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளன. மேலும் பிற வட்டங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது. வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.
ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள படைவீடு, புஷ்பகிரி, கண்டலாபுரம், மல்லிகாபுரம், ராமநாதபுரம், வீரக்கோயில் மற்றும் சந்தவாசல், வெல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 30 ஆயிரம் வாழை மரங்கள் பாதியாக முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதேபோல் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மூழ்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளன.
சேதமடைந்துள்ள விவசாய நிலங்களை வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்துள்ள பகுதிகளை வருவாய் துறையினர் பார்வையிட்டு வருகின்றனர்.
தரைப்பாலம் மூழ்கியது: வந்தவாசி அருகே உள்ள ஆலத்துறை கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. மேலும் கனமழையால், ஆலத்துறையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் பையூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, ஆலத்துறை கிராமமே இரண்டாக பிரிந்து கிடக்கிறது. வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலத்தில் கயிற்றை கட்டி, கிராம மக்கள் கடக்கின்றனர். மேலும் கால்நடைகளையும் அழைத்து செல்கின்றனர். கயிற்றை கட்டி தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடப்பதை கிராம மக்கள் தவிர்க்க வேண்டும் என வருவாய்த் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
10 ஆடுகள் உயிரிழப்பு: செய்யாறு அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் சூளாவளி காற்று வீசியிதில், ராமமூர்த்தியின் ஆட்டு கொட்டகை மீது, புளியமரம் வேரொடு சாய்ந்தது. இதில், ஆட்டு கொட்டகையில் இருந்த ஆடுகளில் 10 ஆடுகள், உடல் நசுங்கி உயிரிழந்தது. கால்நடை பராமரிப்புத் துறையினர், உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் என ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனை ஊராட்சி துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அகற்றி உள்ளனர். மேலும் மின் கம்பங்கள் சாய்ந்தும், பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கிறது. மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் மின்சாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வெம்பாக்கத்தில் 25 செ.மீ., மழை: தமிழகத்தில் அதிகபட்சமாக வெம்பாக்கம் வட்டத்தில் இன்று (10-ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 25 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக, செய்யாறு வட்டத்தில் 18 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும் வந்தவாசி வட்டத்தில் 9 செ.மீ., ஜமுனாமரத்தூர் வட்டத்தில் 8.1 செ.மீ., கலசப்பாக்கம் வட்டத்தில் 5 செ.மீ., கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் 4 செ.மீ., ஆரணி வட்டத்தில் 4.5 செ.மீ., செங்கம் வட்டத்தில் 1 செ.மீ., போளூர் வட்டத்தில் 2.5 செ.மீ., திருவண்ணாமலை வட்டத்தில் 1.3 செ.மீ., தண்டராம்பட்டு 1.2 செ.மீ., மற்றும் சேத்துப்பட்டு வட்டத்தில் 2.5 செ.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 7 செ.மீ., மழை பெய்துள்ளதாக பதிவாகி இருக்கிறது.
அணைகள் நிலவரம் 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளன. அணைக்கு வரும் விநாடிக்கு 1,980 கனஅடி தண்ணீரும், கால்வாய் மற்றும் தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படுகிறது. அணையில் 6,875 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன. அணை பகுதியில் 16 மி.மீ., மழை பெய்துள்ளது.
59.04 அடி உயரம் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 56 அடியாக இருக்கிறது. அணையில் 620 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன. அணைக்கு விநாடிக்கு வரும் 45 கனஅடி தண்ணீரும் செய்யாற்றில் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 6.80 மி.மீ., மழை பெய்துள்ளது.
22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 19.52 அடியாக உள்ளது. அணையில் 68 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. அணை பகுதியில் 16.40 மி.மீ., மழை பெய்துள்ளது.
62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 51.17 அடியாக இருக்கிறது. அணையில் 181.672 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன. அணையில் இருந்து விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 12.80 மி.மீ., மழை பெய்துள்ளது.
308 ஏரிகள் நிரம்பியது திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 697 ஏரிகள் உள்ளன. இதில், 308 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. 75 – 99 சதவீதம் வரை 59 ஏரிகளும், 50 – 74 சதவீதம் வரை 92 ஏரிகளும், 25 – 49 சதவீதம் வரை 211 ஏரிகளும், 1 – 24 சதவீதம் வரை 27 ஏரிகளும் நிரம்பி உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago