மெரினா மரப்பாதை விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: மாண்டஸ் புயலால் சேதமடைந்த சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை விரைவில் சீரமைக்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மாண்டஸ் புயல் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று காலை செய்தியாளர்களை சந்திப்பில் விவரித்தார். அப்போது அவர், "சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பாதை சேதமடைந்துள்ளது. இயற்கை சீற்றத்தினால் இது நடந்துள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் கான்க்ரீட் அமைப்புகளுக்கோ, இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டமைப்புகளை உருவாக்க அனுமதி இல்லை. அதனாலேயே மரப்பாதை அமைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இன்னும் வலுவான பாதையை அமைக்க நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சேதமடைந்த பாதை இன்னும் 2, 3 தினங்களில் சீரமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மீண்டும் கடலையும், கடற்கரையையும் நாடும்படி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

நிவாரண முகாம்கள் பற்றி அவர் கூறுகையில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 41 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தியிருந்தோம். ஆனால், வட சென்னையில் 2 முகாம்களில் குறைந்த அளவிலேயே மக்கள் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. முதல்வர் தனக்கு வாக்களித்த மக்கள் மன நிறைவு பெறும் வகையில், வாக்களிக்காதவர்கள் இவருக்கு நாம் வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று ஏங்கும் வகையில் தான் எல்லாப் பணிகளையும் செய்து வருகிறார். புயல் நிவாரணப் பணிகளும் அப்படித்தான் செய்து வருகிறார்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE