இன்று மதியத்துக்குள் மின் விநியோகம் சீரமைக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

By செய்திப்பிரிவு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்ட பகுதிகளில் இன்று மதியத்திற்குள் மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாகக் கரையைக் கடந்தது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. புயல் கரையைக் கடந்த பின்னரும் கூட கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. தலைநகர் சென்னையிலும் ஆங்காங்கே மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

புயல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது பலத்த காற்று காரணமாக சில பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது. அதனால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் "மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. புயலால் சேதம் அடைந்த மின்கம்பங்களை ஆய்வு செய்து அவற்றை சரிசெய்து அதன்பின் மின்விநியோகம் வழங்கப்படும்.இன்று மதியத்திற்குள் 100 சதவீதம் முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

மின்சாரம் தாக்கி 4 பேர் பலி: இதற்கிடையில் மாண்டஸ் புயல் காரணமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து சென்னை, காஞ்சிபுரத்தில் தலா இருவர் என 4 பேர் உயிரிழந்தனர். இதில் சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, ராஜேந்திரன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தனர். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் சிப்காட்டில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் இருவர் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தனர்.

இதேபோல், மழை காரணமாக சென்னை சைதாபேட்டையில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர். இதில் ஒரு பெண்ணும் அவரது கைக்குழந்தையும் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். இதுதவிர பெரிய அசம்பாவித சம்பவங்கள் பற்றிய விவரங்கள் இப்போதைக்கு ஏதும் பதிவாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE