முழுமையாக கரையை கடந்தது மாண்டஸ் புயல்: மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.
புயலின் மையப்பகுதி கரையை கடந்தது: மாண்டஸ் புயலின் மையப்பகுதி தற்போது கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலின் பின் பகுதி அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியது.
சென்னையில் 3 மணி நேரத்தில் சுமார் 65 மரங்கள் விழுந்தன: மாண்டஸ் புயல் எதிரொலியாக தலைநகர் சென்னையில் 3 மணி நேர இடைவெளியில் சுமார் 65 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். காற்றுடன் பெய்த மழையால் சென்னையில் மரங்கள் விழுந்துள்ளன.
2-3 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்: மாண்டஸ் புயல் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்குள் முழுமையாக கரையை கடந்து விடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் மழை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி தற்போது புயல் நகர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 70 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்: மாண்டஸ் புயலின் மைய பகுதி தமிழக தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புயல் கரையை கடக்க உள்ள மாமல்லபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மின்சாரம் தடை: "மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். புயலின் பொது சேதமடைவதை சரிசெய்ய மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் அதிகம் உள்ளதாக சொல்லப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
வெளிவட்டப் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது: சென்னை வானிலை மைய இயக்குநர் தற்போது அளித்த பேட்டியில், "மாண்டஸ் புயல் தற்போது மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே சுமார் 60 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அதனை சுற்றிய காற்றின் வேகம் 70 - 80 கிமீ வேகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. 14 கிமீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் மணிக்கு 65 முதல் 70 கிமீ வேகத்தில், சமயங்களில் 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை காலை வரை காற்று வீசக்கூடும். அதன்பிறகு படிப்படியாக மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் குறையக்கூடும்.
மேலும், தற்போது மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது. 9.30 மணிக்கு புயலின் வெளிபுறப்பகுதி கரையை கடக்கத் தொடங்கி மையப்பகுதி 11.30 மணிக்கு கரையை கடக்கும். பின்புற வெளிப்பகுதி அதிகாலையில் கரையை கடக்கும். இதனால் தற்போது மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மக்களைக் காக்க அரசு உரிய நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின்: சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், எந்தளவுக்கு மழை வந்தாலும், காற்று வீசினாலும் அவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சில முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சில முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்படவில்லை. இருப்பினும் மக்களுக்கு உரிய முறையில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
121 ஆண்டுகளில் சென்னை-புதுவை இடையே 12 புயல்கள்: 1891 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே 12 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தைக் கடந்தால், இது 13-வது புயலாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மெரினா சிறப்புப் பாதை சேதத்திற்கான காரணம் என்ன? மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொது) ராஜேந்திரன், இதை அமைக்கும்போது 20 மீட்டருக்கு தள்ளிதான் கடல் இருந்தது. தற்போது புயல் காரணமாக தண்ணீர் இந்தக் கட்டுமானத்திற்கு கீழ் உள்ள மண்ணை கரைத்துவிட்டது. இதில் கடல் பரப்பிற்கு அருகில் உள்ள வியூ பாயின்ட்தான் சேதம் அடைந்துள்ளது, மரப்பலகைகள் அனைத்தும் நல்ல நிலையில்தான் உள்ளன. ஆணிகள் பெயர்ந்துவிட்ட காரணத்தால் கட்டுமானம் சேதம் அடைந்துள்ளது. இயற்கை சீற்றங்களின்போது பெரிய கட்டுமானங்களே சேதம் அடைந்துள்ளது. இது வெறும் மரம்தான் என்று விளக்கம் அளித்தார்.
சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு: சென்னையில் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், பயணிகள் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னையில் கடந்த சில மணி நேரமாக நல்ல மழை பெய்து வருகிறது. ஆனாலும், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தகவல் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள ரயில்பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும்,பேரிடர் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் 044-25330714, 044-25330952 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவது முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் பலத்த காற்று: சென்னையில் இடைவிடாது பெய்யும் மழை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. மேலும், மெரினா கடற்கரைகளில் பலத்த காற்று வீசி வருகிறது.சென்னை கடந்த சில மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இன்று (நவ.9) காலை முதல் விட்டு விட்டு பெய்து வந்த மழை, மதியம் முதல் இடைவிடாது பெய்து வருகிறது.
கடற்கரைப் பகுதிகளில் காற்று பலமாக வீசி வருகிறது. மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் வீசும் பலத்த காற்று காரணமாக மணல் சாலைகளை மூடி உள்ளன. மாமல்லபுரம் மற்றும் கோவளம் பகுதிகளிலும் காற்று வேகமாக வீசி வருகிறது.சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளன. தற்போது வரை 20-க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் நாளை (நவ.9) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும் மாண்டஸ் புயல்: மாண்டஸ் தீவிர புயல் வெள்ளிக்கிழமை காலை வலுவிழந்து புயலாக மாறியது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்த இந்தப் புயல், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை இரவுக்கும், சனிக்கிழமை அதிகாலைக்கும் உட்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்: சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், ஆனால் பொதுமக்கள் பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் போக்குவரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் வழக்கம்போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மாண்டஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில், பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை புயல் கரையைக் கடக்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இசிஆர் சாலை வழியாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் மற்றும் காரைக்கால் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மீட்பு பணியில் 16,000 போலீஸார்: மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 12 மாவட்ட பேரிடர் மீட்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை பெருநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது. இதன்படி பொதுமக்களை பாதுகாக்கவும், அவசர அழைப்பு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை பெருநகர காவல் சார்பில் 12 மாவட்ட பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இக்குழுவினரிடம் தயார் நிலையில் உள்ளன.
பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் வீடுகள் சேதம்: புதுச்சேரியின் பிள்ளைச்சாவடியில் கடல் சீற்றத்தால் வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பாதிப்பை நேரில் பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி, ஆறுதல் தெரிவித்ததுடன், உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
தமிழக பேரிடர் மீட்புப் படையின் 14 குழுக்கள் நிலைநிறுத்தம்: மாண்டஸ் புயலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்: தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் இயங்கும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம்: மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது.
மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயின்ட் பின்புறம் மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர் 27-ம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து வருவதால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்தது.
பொதுமக்கள் செய்ய வேண்டியவை: ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்; பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும்போது ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் சரியான முறையில் இருக மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வீட்டின் மின்இணைப்பு மற்றும் சுவிட்சுகள் அணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை பொதுமக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கியுள்ளது.
பொதுமக்கள் செய்யக் கூடாதவை: வெள்ளிக்கிழமை இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும்போது திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புயல் மற்றும் கனமழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கியுள்ளது.
சென்னையில் 24 மணி நேரத்தில் 7 செ.மீ. மழைப்பதிவு: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago