ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் சந்தேகம் உள்ளது: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

By ஆர்.பாலசரவணக்குமார்

உடலை தோண்டியெடுத்து பரிசோதிக்க ஏன் உத்தரவிடக் கூடாது?- நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், “அவரது மரணத்தில் எனக்கும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளது” என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பிரதமரின் அலுவலகம் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞரும், தமிழக அரசு சார்பில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞரும் நோட்டீஸ் பெற்றுக்கொண்டனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் அதிமுக தொண்டன். தற்போதும் அடிப்படை உறுப்பினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா உடல்நலம் முன்னேற்ற மடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் கூறி வந்தது. எல்லா தகவல்களும் ஜெயலலிதா நன் றாக உள்ளார். விரைவில் வீடு திரும்பு வார் என்றே கூறி வந்தன. இதை உறுதி செய்யும் விதமாக மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டியும் ஜெயலலிதாவின் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறினார்.

டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், அவர் நன்றாக இருப்ப தாக பேட்டி அளித்தனர். டிசம்பர் 5-ம் தேதி மாலை “ஜெயலலிதா இறந்துவிட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது” என அப்போலோ மருத்துவமனை நிர்வா கம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அன்றிரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டார் என மற்றொரு அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று அறிவிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்கிறார். ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, “அவருடைய கால்கள் அகற்றப்பட் டுள்ளன, அவரது உடல் பதப்படுத்தப்பட் டுள்ளது” எனக் கூறப்பட்டது.

டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்த அவரது உடல் மறுநாளே அடக்கம் செய்யப்பட்டபோது எதற்காக பதப்படுத்த வேண்டும்? எதற்காக இறப்பதை அறிவிக் கும் முன்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும்? அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தலுக்கு கைரேகை பெறும்போது அவர் சுயநினைவோடுதான் இருந்தாரா? என அவரது மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஏற்கெனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல மிகப்பெரிய மக்கள் தலைவரான ஜெயலலிதாவின் மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும். அதுபோல மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலைப் பத்திரமாக பாதுகாக்க உத்தர விட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அந்த ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.

மரணம் குறித்த அறிக்கையை தாக் கல் செய்ய தமிழக அரசு மற்றும் மருத்துவ மனை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண் டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளியே வரும். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் பல முரண்பாடுகள் உள்ளன” என்றார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக் குமாரசுவாமி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. சரியான சிகிச்சைதான் அளிக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகத்தான் அவர் இறக்க நேரிட்டது. இதே காரணத்துக்காக டிராஃபிக் ராமசாமி மற்றும் பிரவீணா ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது. எனவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ.மதனகோபாலராவ், “தேவைப்பட்டால் இந்த மனு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க தயாராக உள்ளேன். மத்திய அரசுக்கு அனைத்து விவரங்களும் தெரியும்” என்றார்.

அப்போது நீதிபதி எஸ்.வைத்திய நாதன், ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களைப் போக்க மாநில அரசு முற்றிலுமாக தவறிவிட்டது. மத்திய அரசும் அவ்வப்போது எய்ம்ஸ் மருத்து வர்கள், மத்திய அமைச்சர்கள் ஏன் ஆளுநரைக்கூட தனது பிரதிநிதிகளாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிந்து கொண்டது. ஆனால் ஒரு மாநில முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மத்திய அரசும் மக்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காதது கண்டனத்துக்குரியது. இதுவரை அமைதி காத்துவிட்டு இப்போது பதிலளிக்க மத்திய அரசு முன் வருகிறது. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல்களைத் தெரிவிக்காததில் இருந்தே பல உண்மைகள் மறைக்கப் பட்டுள்ளதோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அவரது வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன.

மனுதாரர் அதிமுக உறுப்பினர். அவர் தனது கட்சித் தலைவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். பொதுவாக மரணத்தில் சந்தேகம் எழுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அதைப் போக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. ஒரு நீதிபதி என்பதைத் தாண்டி சாதாரண குடிமகன் என்ற அடிப்படையில் எனக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. ரத்த உறவினரான அவரது அண்ணன் மகள் தீபா இதுவரை நீதிமன்றத்தை அணுகாதது ஏன் எனத் தெரியவில்லை. அவரது உடலைத் தோண்டியெடுத்தால்தான் உண்மைகள் வெளியே வருமா?. அப்படியென்றால் உண்மைகள் வெளியே வர அவரது உடலைத் தோண்டியெடுத்து பரிசோதிக்க ஏன் உத்தரவிடக் கூடாது? இது பொதுநல வழக்கு என்பதால் தலைமை நீதிபதி முன்பாகத்தான் விசாரணைக்கு வரும். ஒருவேளை இந்த வழக்கு வழக்கமான முறையில் என்னிடம் விசாரணைக்கு வந்திருந்தால் ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து பரிசோதிக்க உத்தரவிட்டிருப்பேன்.

மேலும் மனுதாரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மர்ம மரணம் குறித்து அறிய கொல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைத்தது போல, ஜெயலலிதாவின் மரணத்தை அறிய 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்க கோரியுள்ளார். இந்த மனுவை நிராகரிக்க முடியாது’’ என கருத்து தெரிவித்தார்.

அதன்பிறகு இந்த வழக்கு தொடர் பாக பிரதமர் அலுவலகம், சிபிஐ, மத்திய உள்துறை அமைச்சகம், நாடாளுமன்ற விவகாரத்துறை, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் மத்திய அரசு வழக்கறிஞரும், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், தமிழக சட்டசபை செயலாளர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் ஆணையர் ஆகியோர் சார்பில் தமிழக தலைமை அரசு வழக்கறிஞரும் நோட்டீஸ் பெற்றுக்கொண்டனர். அப்போலோ மருத்துவமனை தலைவருக்கு மனுதாரர் சார்பில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 9-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்