தென்காசி: "ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அறிவிக்கப்பட்ட பணிகள், நடைபெறுவதை நானே பார்த்து அந்த பணிகளை முடுக்கிவிட இருக்கிறேன். அமைச்சர்களை உடன் வைத்துக்கொண்டு, அதிகாரிகள், அலுவலர்களை நேரில் அழைத்துப் பேச இருக்கிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த விழாவில் முதல்வர் பேசியது: "சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மதுரை பொதுக்கூட்டத்தில் நான் பேசுகிறபோது சொன்னேன், 'கழக அரசு அமைந்ததும் தேவர் கல்லூரி தனிநபர் பிடியில் இருந்து மீட்டு அதற்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்துவேன் என்று உறுதிமொழி அளித்தேன். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியிலும் கோரிக்கை மனுக்கள் என்னிடத்தில் தரப்பட்டன.
ஆட்சி அமைந்ததும், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டப்படி, அரசாணை எண் 146-இன்கீழ் கல்லூரியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமித்திருக்கிறோம். என்ன நோக்கத்துக்காக மூக்கையாத்தேவரும், செல்லப்பாண்டியனும் இதனை உருவாக்கினார்களோ, அதனடிப்படையில் கல்லூரியை வளர்த்து, இந்தப் பகுதி மக்கள் பயனடையக்ககூடிய வகையில் அதை நடத்திக் காட்டுவோம் என்று அந்த உறுதியை இந்த மேடையில் நான் கூறுகிறேன்.
» 50 கேள்விகளுடன் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
» டிச.12-ல் குஜராத் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் பூபேந்திர படேல்
இப்படி ஒவ்வொருவருடைய தேவைகளையும் கேட்டுக் கேட்டு- ஒவ்வொரு பகுதியின் பிரச்சினையையும் அறிந்து, அறிந்து நிறைவேற்றித் தரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், "திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த சாதனையையும் செய்யவில்லை - எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சில மாதங்கள் வரைக்கும் என்ன சொன்னார் என்றால், விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு "இதை நிறைவேற்றவில்லை, அதை நிறைவேற்றவில்லை" என்று சொல்லிவிட்டு இருந்தார், சொல்லிக்கொண்டு இருந்தார் என்று சொல்லக்கூடாது, புலம்பிக் கொண்டிருந்தார். அதையும் நாம் நிறைவேற்றியதும் - என்ன சொல்லுவது என்று தெரியாமல் எதையுமே நிறைவேற்றவில்லை அப்படி என்று ஒரே வரியில் சொல்லி இருக்கிறார்.
பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம். அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் 19 மாதத்துக்கு முன்பே விழித்துவிட்டார்கள். இருண்ட காலத்தை முடித்து வைத்து, உதயசூரியனின் காலத்தை உருவாக்கி விட்டார்கள். எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் நான் விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் சொன்ன வாக்குறுதிகள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருப்போம். ஏதோ அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக நம்மை பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம். உணர்வுப் பூர்வமாக உழைக்கிறோம். தமிழ்நாட்டை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக ஆக்குவது ஒன்றுதான் என்னுடைய குறிக்கோள்.
கடந்த ஆண்டு இந்தியா டுடே-யில் ஓராண்டு நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியாவில் இருக்கக்கூடிய முதலமைச்சர் வரிசைப்படுத்திய நேரத்தில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதலிடம் என்று அவர்கள் கணக்கெடுத்து அறிவித்தார்கள். அப்போது நிருபர்கள் கேட்டபோது நான் சொன்னேன், எனக்கு இது பெருமையல்ல, என்னைப் பொறுத்தவரையில், நான் முதல்வனாக பொறுப்பேற்று முதலிடத்திற்கு வந்திருப்பதைவிட நான் முதல்வனாக பொறுப்பேற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்திற்கு வரவேண்டும் இதுதான் என்னுடைய லட்சியம் என்று நான் சொன்னேன். அதுதான் என்னுடைய குறிக்கோள். அதைதான் நாங்கள் எதிர்நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.
தொழில் வளர்ச்சியா? சிறுதொழில் மேம்பாடா? கல்வியா? சுகாதாரமா? உள்கட்டமைப்புப் பணிகளா? மகளிர் மேம்பாடா? ஒடுக்கப்பட்டவர்களுடைய மக்களின் மேம்பாடா? இளைஞர் நலனா? விளையாட்டா? அனைத்திலும் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை தீட்டி வருவது மட்டுமல்ல - அந்தத் திட்டங்களால் தமிழகம் உயர்ந்து வருவதை கண்ணுக்கு முன்னால் நான் பார்க்கிறேன். நாள்தோறும் எங்களுக்கு கிடைக்கும் செய்திகள் இதனை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசாங்கத்தின் சார்பில் சில நேரங்களில் வெளியாகக்கூடிய புள்ளிவிவரங்களை பார்த்தீர்கள் என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்ணுக்குத் தெரியும். சில தன்னார்வ அமைப்புகள் வெளியிடும் அளவீடுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி தெரியும். ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் கட்டுரைகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பெருமைப்பட எழுதுகிறார்கள்.
இவை அனைத்தும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது - எல்லாத் துறையிலும் உயர்ந்து வருகிறது - எல்லாப் பிரிவினரையும் உயர்த்தி வருகிறது என்பதற்கான திட்டவட்டமான சான்றுகளாக அமைந்திருக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக, பயனடைந்த மக்களுடைய மனங்களில் உருவாகி வரும் மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன். தென்காசியிலிருந்து இந்த இடத்திற்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? மிஞ்சி, மிஞ்சி போனால் ஒரு 15 நிமிடத்திற்கு வந்து சேர்ந்துவிடலாம். ஆனால் இங்கு வருவதற்கு நாங்கள் ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கிறது. என்ன காரணம்? வருகிற வழியெல்லாம் சாலையின் இருபுறங்களிலும், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், இருமருங்கிலும் நின்றுகொண்டு என்னை வரவேற்றது மட்டுமல்ல, வாழ்த்தியது மட்டுமல்ல, இந்த ஆட்சி தான் தொடரவேண்டும், இந்த ஆட்சிதான் தொடரவேண்டும் என்று அவர்கள் என்னை ஊக்கப்படுத்திய அந்த காட்சியை நான் பார்த்தேன். இதுதான் நல்லாட்சியினுடைய அடையாளம்!
திட்டமிடுவது - திட்டமிட்டதை செயல்படுத்திக் காட்டுவது! அதை நிறைவேற்றுவதுதான் என்னுடைய நாள்தோறப் பணியாக இருக்கிறது! திட்டத்தை அறிவித்தோம் - நிதியை ஒதுக்கினோம்- அத்தோடு கடமை முடிந்துவிட்டது என்று இல்லாமல், ஒவ்வொரு நாளும் நான் அதைக் கண்காணிக்கிறேன். உரிய காலத்தில் அனைத்துத் திட்டங்களையும் முடிப்பது தான் என்னுடைய இலக்கு என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணத்தை நடத்தி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல பணிகளை முடித்துக் கொண்டு வருகிறேன். திறப்பு விழா நிகழ்ச்சி, அடிக்கல் நாட்டு விழா, இதையெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்தில் முடித்துக் கொண்டு வருகிறேன்.
அடுத்தகட்டமாக, மாவட்டவாரியாக, இந்தத் திட்டப்பணிகள் குறித்து குறிப்பிட்ட மாவட்டத்திற்கு நான் வந்து ஆய்வு நடத்தத் திட்டமிருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அறிவிக்கப்பட்ட பணிகள் – நடைபெறுவதை நானே பார்த்து – அந்த பணிகளை முடுக்கிவிட இருக்கிறேன். அமைச்சர்களை உடன் வைத்துக்கொண்டு - அதிகாரிகள் - அலுவலர்களை நேரில் அழைத்துப் பேச இருக்கிறேன். நாங்கள் என்ன நோக்கத்திற்காக இந்தத் திட்டங்களைத் தீட்டித் தருகிறோமோ அதே நோக்கம் கடைநிலை அலுவலர்கள் வரை இருந்தால்தான் அந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமை அடையும்.
மக்களிடம் செல்! மக்களோடு வாழ்! மக்களிடம் இருந்து கற்றுக் கொள்! என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. அப்படி மக்களுக்கான அரசாக நம்முடைய அரசு செயல்படும். இங்கே அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டவாறு, திருநெல்வேலியிலிருந்து இந்த மாவட்டம் பிரிந்திருந்தாலும், இந்த தென்காசிக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும், நான் நிறைவேற்றித் தருவேன் அதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எடுத்துச்சொன்ன உறுதிமொழிகள், கேட்டிருக்கக்கூடிய கோரிக்கைகள், அதில் எடுத்துச்சொன்ன பல்வேறு பிரச்சனைகள் இவையெல்லாம் ஏற்கெனவே வராமலில்லை. வந்திருக்கிறது. இருந்தாலும், நினைவுபடுத்தியிருக்கிறார்கள், சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அதற்குரிய நடவடிக்கை நிச்சயமாக இந்த அரசு எடுக்கும், அதை நிறைவேற்றித் தருவோம், தென்காசி மாவட்டத்தினுடைய முன்னேற்றத்திற்கு நிச்சயமாக இந்த அரசு துணை நிற்கும், நான் அதற்கு துணை நிற்பேன்" என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago