சென்னை: வங்கக் கடலில் உருவாகும் ‘மேன்டூஸ்' புயல், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (டிச. 9) இரவு கரையைக் கடக்கும். இதனால், வட தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, டிச.7-ம் தேதி (நேற்று) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, தென்கிழக்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து ‘மேன்டூஸ்' புயலாக மாறி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, 8, 9-ம் தேதிகளில் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டி தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலைபெறக்கூடும். வரும் 9-ம் தேதி இரவு மற்றும் 10-ம் தேதி காலைக்குள் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், 8-ம் தேதி (இன்று) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் லேசான மழை பெய்யும்.
அதேசமயம், 8-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
9 -ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஓரிருஇடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
10-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: டிச. 8-ம் தேதி (இன்று) மாலை முதல் 9-ம் தேதி மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், வரும் 9-ம் தேதி மாலை முதல் 10-ம் தேதி மாலை வரை 70 முதல் 90 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 8 முதல் 10-ம் தேதி வரை40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசும். எனவே, தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
விமான நிலைய பாதுகாப்பு: இதற்கிடையே, புயல் தொடர்பாக, சென்னை விமான நிலைய இயக்குநர், பொதுமேலாளர், விமான நிலைய வானிலை இயக்குநர் தலைமையில் வான் போக்குவரத்து தொடர்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
54 ஐஏஎஸ் அதிகாரிகள் விரைவு: சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாவட்டங்களுக்கென வடகிழக்கு பருவமழைக் கால கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள 54 ஐஏஎஸ் அதிகாரிகள், தொடர்புடைய மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 390 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago