வீடு வீடாக சென்று ஆதார் எண் பெறும் மின்வாரியத்தின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஊழியர்கள் நுகர்வோர் வீடுகளுக்குச் சென்றுஆதார் எண்ணை பெற வேண்டும்என ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மின்வாரிய ஊழியர்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளர் எஸ்.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மின்பகிர்மான வட்டம் மின்திட்டத்தில் உள்ள பிரிவு அலுவலர்கள் அனைவரும் இன்று (நேற்று) காலை அந்தந்த பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை அழைத்து மின்நுகர்வோர் ஆதார் எண்ணை மின்இணைப்புடன் இணைப்பது குறைவாக உள்ளது. எனவும், எனவே, ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று மின்நுகர்வோரிடம் ஆதார் எண்ணைபெற்றுவந்து கணினியில் பதிவேற்றம் செய்திடுமாறு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஏற்கெனவே, மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஊழியர்கள் தங்களது அன்றாட பணிகளை முடக்கிவிட்டு ஆதார் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வீதிவீதியாக அலைய வைப்பதை ஏற்க முடியாது. களப்பிரிவிலும், கணக்கீட்டு பிரிவிலும் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், தினந்தோறும் கடும் பணிச்சுமையுடனும், மனஅழுத்தத்துடனும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வாய்மொழி உத்தரவுகள் மூலம் ஊழியர்களை கொத்தடிமைகளாக பணியாற்ற வைக்க நிர்வாகம் நினைத்தால், அதை எதிர்த்து ஊழியர்கள் போராட தூண்ட வேண்டாம். எனவே, இதுபோன்ற முயற்சிகளை கைவிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE