‘புதுச்சேரியில் வெளிமாநில பால் கொள்முதலில் ஊழல்’ - தரையில் பாலைக் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும், பாண்லேயில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், வெளிமாநில பால் கொள்முதலில் நடக்கும் ஊழலை நிறுத்தக் கோரியும் தரையில் பாலைக் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகள், கன்று குட்டிகளுடன் போராட்டத்துக்கு வந்திருந்தனர். அண்டை மாநிலங்களில் இருந்து புதுச்சேரி பாண்லேக்கு வாங்கப்படும் பால் ரூ.42-க்கு மேலாக இருக்கிறது. உள்ளூர் பால் உற்பத்தியாளர்களிடம் வாங்கப்படும் பால் ரூ.32-க்குதான் விலை நிர்ணயித்துள்ளனர். இதுபற்றி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினால், அவர் தட்டிக்கழிப்பதாக கூறி சாலையில் பாலை ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்,

போராட்டம் தொடர்பாக சங்கத் தலைவர் பத்மநாபன், செயலர் அன்புமணி ஆகியோர் கூறுகையில், "தமிழகம், கேரளம் போல புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45-க்கு நிர்ணயித்து உயர்த்தி அரசு வழங்கிட வேண்டும், வெளிமாநில பால் கொள்முதலை நிறுத்தி புதுச்சேரி பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி உற்பத்தியை பெருக்க வேண்டும், கிராமக் கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன் கறவை மாட்டுக் கடன் வழங்கி புதுச்சேரியின் பால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்” என்றனர்.

ஊழலுக்கு வழி வகுக்கும் வெளிமாநில பால் கொள்முதலை நிறுத்த வேண்டும். ஊழலில் ஈடுபடும் பாண்லே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைத் தீவனத்தை அரசே உற்பத்தி செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால், 100-க்கும் மேற்பட்ட சங்கங்கள் உடன் இணைந்து சட்டபேரவை அருகே தங்களின் மாடுகளுடன் சாலையில் பாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுப்பட போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE