மதுரவாயல் - துறைமுகம் சாலையால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனு

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரவாயல - துறைமுகம் சாலையால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்குக் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் நேற்று மனு கொடுத்தார்.

இதுகுறித்து தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரவாயல்–துறைமுகம்உயர்மட்ட சாலையால் பாதிக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வாகன உதிரிப்பாகங்களை வாங்கி விற்கும் வியாபாரிகள் அனைவருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டு ஏற்கெனவே மேம்படுத்தப்பட்ட வணிக மனைகளை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். இதையடுத்து, உடனடியாக வியாபாரிகளுக்குக் கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் சங்க தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, என்.உசேன்சேட், ஹாஜி எஸ்.யு.சாகுல் ஹமீது உடன் இருந்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE