ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து குளிர்கால கூட்டத்தொடரில் பேச அனுமதி கோரியுள்ளோம்: திமுக

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளதாக திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின்னர், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி.ஆர்.பாலு கூறியது, "இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 25 மசோதாக்களைக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த 25 மசோதாக்களில் 2 நிதி தொடர்பானவை.

மீதமுள்ள 23 மசோதாக்களில், மாநில கூட்டுறவு சட்டத்திருத்த மசோதா மற்றும் காடுகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை தற்போது கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தினோம். மேலும், இவைகளை நிலைக்கழுகளுக்கு அனுப்பி, விவாதித்த பின்னர் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

மேலும் திமுக சார்பில், சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டங்கள் அனுப்பி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. அந்த திட்டங்களுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. எனவே இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என கூறி இருக்கிறோம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் காரணமாக, பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளும் குறைகிறது. சட்டமாகவே இயற்றப்பட்டுவிட்டதால், இதுகுறித்து மறு ஆய்வுக்கு உட்படுத்தி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆன்லைன் சூதாட்டத்தால், தமிழகத்தில் கிட்டத்தட்ட 30 பேர் இறந்துள்ளனர். எனவே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். அதேபோல், தமிழக ஆளுநரிடம் 22 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. எனவே ஆளுநர் இவ்வாறு செய்து வருவது தவறு, எனவே இதுகுறித்து எங்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அதேபோல் நூறு நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கிற நிதி குறைவாக உள்ளது. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ற வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவே அதுதொடர்பாகவும், பெட்ரோல், கேஸ், சிலிண்டர்களின் விலை உயர்வு குறித்தும் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE