புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி அல்லாத பொருளாதாரத்தில் நலி வடைந்த பொது பிரிவினருக்கு பிரத்யேகமாக கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 103-வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா கடந்த 2019-ம் ஆண்டு ஜன.8-ம் தேதி மக்களவையிலும் மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
அப்போதே இந்த இடஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் இந்த சட்டதிருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்புகள், தனி நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அதன்படி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான பி.வில்சன்,உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வுமனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தமிழகத்தில் இடஒதுக்கீடு என்பது 79 சதவீதமாகி விடும். அதுவே மற்ற மாநிலங்களில் 60 சதவீதமாகி விடும். அப்படி இடஒதுக்கீடு வழங்கினால் சமூக நீதிக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராகி விடும். இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் பிற சமூகத்தைச் சேர்ந்த திறமைசாலி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என இந்த சட்டம் வரையறை செய்கிறது.
இந்தியாவில் 97 சதவீதம் பேரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் உள்ளது என்ற நிலையில் இந்த இடஒதுக்கீடு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த சட்டத் திருத்தம் அரசியலமைப்பு சாசனப் பிரிவு 14-ஐ கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்திரா சாவ்ஹ்னி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு விரோதமானது.
சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினரைக் காட்டிலும், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னும் மோசமான நலிவுற்ற நிலையில் உள்ளனர். இதை உச்ச நீதிமன்றம் கருத்தில்கொள்ள மறந்துவிட்டது.
10 சதவீத இடஒதுக்கீட்டால் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். இந்த சீராய்வு மனுவை நீதிபதிகளின் அறையில் நடத்தாமல் நீதிமன்ற அறையில் நடத்த வேண்டும். குறிப்பாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்குள் கொண்டுவராமல் புறம்தள்ளியிருப்பது சமத்துவ கட்டமைப்புக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது.
சாதியை ஒழிப்பதற்காக இடஒதுக்கீட்டை பலிகடாவாக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கூற்றை திரும்பப்பெற வேண்டும். அத்துடன் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago