செங்கம் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: செங்கம் அருகே அரசுப் பேருந்தும், 2 லாரிகளும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பண்ருட்டியைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். கடலூரைச் சேர்ந்த இளவரசன் என்பவர் நடத்துநராக இருந்தார். பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சென்றபோது, சென்னையில் இருந்து நாமக்கல் நோக்கி, கோழி தீவனம் ஏற்றிச் சென்ற லாரியை அரசுப் பேருந்து முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து பண்ருட்டி நோக்கி காய்கனிகளை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த மற்றொரு லாரியும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனு. இதில் காய்கனி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. அப்போது, அரசுப் பேருந்து மீது கோழி தீவனம் ஏற்றி வந்த லாரியும் மோதியுள்ளது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மணிவாசகம், காய்கனி ஏற்றி வந்த லாரியில் பயணித்த சுமைதூக்கும் தொழிலாளி ராஜேஷ், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வமணி (30) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் 30 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் காய்கனி லாரி ஓட்டுநர் சிவக்குமார், அரசுப் பேருந்து நடத்துநர் இளவரசன், பேருந்தில் பயணித்த ஜெயந்தி ஆகியோர் பலத்த காயமடைந்ததால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், லேசான காயமடைந்தவர்கள் செங்கம் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE