மாற்றுத் திறனாளிகளின் துணிச்சல், திறன் அனைவருக்கும் ஊக்கமளிக்கும்: ஆளுநர், முதல்வர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (டிச.3) நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்திருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: தங்களுக்கான வரம்புகளைக் கடந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதோடு, சமூகத்துக்கும், நாட்டுக்கும் குறிப்பிடும் வகையிலான பங்களிப்பை வழங்கிய மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து மாற்றுத்திறன் சகோதர, சகோதரிகளுக்கு எனது உளம்கனிந்த வாழ்த்துகள்.

சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் திறன் மற்றும் உங்களது துணிச்சல் அனைவரையும் நிச்சயம் ஊக்கப்படுத்தும். மாற்றுத் திறனாளிகளின் தேவை, விருப்பத்தை பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து உறுதுணையாக இருக்க வேண் டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்துவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ‘முடங்கிவிட மாட்டோம், முயன்று கொண்டே இருப்போம்’ என தொடர்ந்து சாதிக்கும், உலகையே மாற்றும் திறன் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு கிடைத்திட வழிவகுப்பதுடன், மனிதம் போற்றி மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிப்போம், கரம் கொடுப்போம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, அனைவராலும் அணுகக்கூடிய சமத்துவமான உலகத்தை உருவாக்கக் கைகோர்ப்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மாற்றுத் திறனாளிகள் வாழ்வை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும்,சலுகைகளையும் வழங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மனிதாபிமான நோக்கத் தோடு மாற்றுத் திறனாளிகளை மதித்து, அவர்களின் தேவைகளை அறிந்து, திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களை சமுதாயத்தில் உயர்வான இடத்தில் வைக்க முயற்சிக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பு இல்லாமல், சமூகத்தின் வளர்ச்சி முழுமை அடையாது என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்கிட உறுதி ஏற்போம்.

மக்கள் நீதி மய்யம்: மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் சம உரிமையுடன் வாழ்வதற்கு ஏற்றச் சூழலை உருவாக்குதல் மத்திய, மாநில அரசுகளின் கடமை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE