சென்னை: "மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை குறித்த காலத்தில் நடத்தப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுகள் சராசரியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடத்தப்படுகின்றன" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “கடந்த காலங்களில் 1:50 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த நடைமுறையை இப்போது திடீரென மாற்றுவது சமூக நீதிக்கு எதிரான செயலாகவே அமையும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையமான டிஎன்பிஎஸ்சி நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல விடைகள் தவறாக உள்ளன. முதல் தொகுதி போட்டித் தேர்வுகளில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதும், முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் விகிதம் குறைக்கப்பட்டிருப்பதும் நியாயமற்றவையாகும்.
தமிழக அரசுக்கு மாவட்ட துணை ஆட்சியர்கள் 18 பேர், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் 26 பேர் உட்பட முதல் தொகுதி பணிகளுக்கு 92 பேரை தேர்ந்தெடுப்பதற்கான முதல் நிலைத் தேர்வுகள் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றன. அத்தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகளை பணியாளர் தேர்வாணையம் கடந்த 28-ஆம் தேதி இரவு வெளியிட்டது. ஆணையம் வெளியிட்ட தற்காலிக விடைகளில் ஏராளமான பிழைகள் உள்ளன. தற்காலிக விடைகளில் உள்ள பிழைகளை தேர்வர்கள் சுட்டிக்காட்டுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். ஆனால், தேர்வர்கள் தெரிவித்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா அல்லது பிழையான விடைகளின் அடிப்படையிலேயே விடைத்தாள்கள் திருத்தப்பட்டனவா என்பது யாருக்கும் தெரியாது.
முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளில் செய்யப்பட்டுள்ள இரு மாற்றங்கள் தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிப்பவையாக உள்ளன. முதல் நிலை தேர்வுக்கான வினாத்தாள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டிருக்கும். இவற்றில் தமிழ் வடிவம் தான் இறுதியானது என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. ஆனால், ஆங்கில வடிவம் தான் இறுதியானது என்று வினாத்தாளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒருவேளை வினாக்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மாற்றம் செய்வதில் பிழை இருந்தால் அது தமிழ் வடிவத்தில் வினாக்களை படித்து தேர்வெழுதியவர்களை பாதிக்கும்.
» கொடநாடு வழக்கு | 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் ஆய்வு தொடக்கம்: அரசு தரப்பு விளக்கம்
» உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரிய சமக வழக்கு: காவல்துறை பரிசீலிக்க உத்தரவு
தமிழ்நாட்டில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தமிழில் மூல வினாக்கள் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப் படுவது தான் நியாயம். அதற்கு மாறாக ஆங்கிலத்தில் வினாக்களை தயாரித்து, அதை தமிழில் தவறாக மொழி பெயர்த்து விட்டு, அதன் பாதிப்புகளை தேர்வர்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது தமிழ்வழியில் படித்து போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
கடந்த காலங்களில் முதல் தொகுதி பணிகளுக்கு முதல் நிலைத் தேர்வு நடத்தப்படும் போது, மொத்த பணியிடங்கள் எவ்வளவோ, அதை விட 50 மடங்கு தேர்வர்கள், அதாவது 1:50 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், இந்த முறை 1:20 என்ற விகிதத்தில் தான் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிராக அமையும். முதல்நிலைத் தேர்வும், முதன்மைத் தேர்வும் வேறு வேறு வடிவிலானவை. முதல் நிலைத் தேர்வில் சராசரிக்கும் சற்று அதிகமாக மதிப்பெண் பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் மிகச்சிறப்பாக செயல்படக்கூடும்.
இதைக் கருத்தில் கொண்டு தான் முதல்நிலைத் தேர்வில் சராசரிக்கும் சற்று கூடுதலாக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்குடன் கடந்த காலங்களில் 1:50 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த நடைமுறையை இப்போது திடீரென மாற்றுவது சமூக நீதிக்கு எதிரான செயலாகவே அமையும்.
தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் விதம் சீரானதாக இல்லை. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை குறித்த காலத்தில் நடத்தப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுகள் சராசரியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடத்தப்படுகின்றன. அதனால், வயது வரம்பை எட்டும் நிலையில் உள்ளவர்களுக்கு 3 முறை தேர்வு எழுதுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டும் தான் தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. இதில் சிறிய தவறு நடந்தாலும் தேர்வர்கள் தங்களின் முதல் தொகுதி பணி கனவை இழக்க வேண்டியுள்ளது.
எனவே, தேர்வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விடைக்குறிப்புகளில் தேர்வர்கள் சுட்டிக் காட்டிய பிழைகள் அனைத்தும் கல்வியாளர்களைக் கொண்டு சரி பார்க்கப்பட வேண்டும்; சரியான விடைக் குறிப்புகளை வெளியிட்டு, அதனடிப்படையில் தான் முதல்நிலைத் தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும். முதல்நிலைத் தேர்வை எழுதியவர்களில் இருந்து 1:50 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago