டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் அடுத்தகட்ட நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் டிச. 1-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச. 2, 3-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவ. 30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 9 செ.மீ., விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூரில் 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட், தென்காசி மாவட்டம் சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE