“எம்.ஜி.ஆர். பின்பற்றிய அண்ணாயிசத்தில் உண்மையான பற்று கொண்டவர்கள் அனைவருக்கும் திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். அத்துடன், எம்.ஜி.ஆர் உடனான பல்வேறு நினைவலைகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுத் துவக்க விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை..
“தமிழ்நாட்டினுடைய முதல் பெண் முதல்வர் என்ற சிறப்புக்குரியர் யார் என்று கேட்டீர்களானால், அம்மையார் ஜானகி எம்.ஜி.ஆர்தான். அவருடைய நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இது சிலருக்கு வியப்பாக இருக்கும், அதிர்ச்சியாக இருக்கும், ஆச்சரியமாக இருக்கும். ஆனால், வரலாற்று உண்மையை மனச்சாட்சிப்படி சிந்திக்கும் யாருக்கும் இது அதிர்ச்சியாக இருக்காது.
'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் இருபதாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சமத்துவ - பொதுவுடைமை கருத்துகளை மக்களிடம் எடுத்துப்போகிற அளவிற்கு சினிமாவில் ஒரு பெரிய ஹீரோவாக நடித்து, ஒரு பெரிய உந்துசக்தியாக இருந்தார். அதற்குப் பின்னால், காலத்தின் சூழ்நிலை கருதி, காலத்தினுடைய சூறாவளி, ஒரு தனி இயக்கம் அவர் கண்டார். அந்த இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் அவருடைய பங்களிப்பு என்பது பதினைந்து ஆண்டுகள்தான். அந்த வகையில் பார்த்தால் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அதிக ஆண்டுகள், அதாவது 1952-ஆம் ஆண்டு முதல் 1972 வரை தி.மு.க.வில்தான் இயங்கிக் கொண்டிருந்தார். இதை அவரே சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார். பல கட்டுரைகளில் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் சொல்கிறார், “நான் கோவையில் இருந்தபோது எனது இல்லத்தில் கலைஞரும் சிறிது காலம் என்னோடு இருந்தார், அப்போது தேசிய இயக்கத்தைச் சார்ந்தவராக நான் இருந்தேன். ஆனால் கலைஞர் ஒரு சுயமரியாதை கொள்கை பேசுபவராக இருந்தார். அவரை எப்படியாவது எனது கொள்கைக்கு இழுக்க நான் முயற்சித்தேன். ஆனால், இறுதியில் கலைஞர் வென்றார். நான் தி.மு.க.வில் இணைந்தேன். இதுதான் வரலாறு. ஆக, இன்றைக்கு தி.மு.க.வின் தலைவராக கலைஞரும், நான் பொருளாளராகவும் நானும் இருக்கிறேன்"- என்று எம்.ஜி.ஆர். எழுதி இருக்கிறார். இதெல்லாம் தெரிந்தவர்களுக்கு நான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பது யாருக்கும் வியப்பாக இருக்காது.
இன்றைக்கு இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கல்லூரி உருவாகியிருக்கிறது என்றால், பல்லாயிரக்கணக்கான மாணவிகள் இங்கே கல்வி பெறவும் அரசின் அனுமதியை வழங்கியவர் யார் தெரியுமா? தலைவர் கலைஞர்தான்.
1996-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்தார். அப்போதுதான் அம்மையார் ஜானகி, முதல்வர் கலைஞருக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார். வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு கோரிக்கை வைத்தார். "சத்யா ஸ்டுடியோ இருக்கும் இடத்தில் ஒரு காலேஜ் தொடங்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்" என்று ஜானகி அம்மையார் கோரிக்கை வைத்தார். உடனே தலைவர், நிச்சயம் அனுமதி தருகிறேன்... என்று சொல்லிவிட்டு உங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது, உங்களை சந்திக்க நானே விரைவில் வந்து பார்க்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். சொல்லி இரண்டு நாட்களில் அம்மையாரின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அவர் மறைந்து விட்டார்.
மறைந்த செய்தி கேட்டு உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்கு தலைவர் கலைஞர் சென்றார், அஞ்சலி செலுத்திவிட்டு, பக்கத்தில் இருந்தவர்களிடத்தில் சொல்லியிருக்கிறார், “அம்மையார் ஜானகி ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார், அந்தக் கோரிக்கையை நான் நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன். 'யார் அந்தக் கல்வி நிறுவனத்தை நடத்தப் போகிறீர்கள்?' என்று ஒரு கேள்வியையும் தலைவர் அப்போது கேட்டிருக்கிறார். அப்படி அக்கறையோடு கேட்டு உருவான கல்லூரிதான் இந்தக் கல்லூரி என்பதை நினைக்கும்போது, நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.
டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாகுவதற்கு எல்லோரும் காரணமாக இருந்திருக்கிறீர்கள், மறுக்கவில்லை. ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்த நேரத்தில் துணை நின்றவர் தலைவர் கலைஞர் என்று நினைக்கிறபோது, அதுவும் நான் வருவதற்கு முக்கியக் காரணம்.
'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். படத்தில் மட்டும் பார்த்தவன் அல்ல நான், தூரத்திலிருந்து பார்த்தவன் அல்ல நான், அவரோடு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. இதே சத்யா ஸ்டுடியோவுக்கு நான் பல முறை வந்திருக்கிறேன். சென்னை, சேத்துப்பட்டு கிறித்துவக் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது அங்கு அடிக்கடி ஸ்கூல் டே நடத்துவோம், அப்போது பல இடங்களுக்குச் சென்று நன்கொடை வாங்குவோம்.
அப்போது நான் முதல்வரின் மகனாகவே இருந்தேன். அதனால் இவனிடத்தில் நன்கொடை சீட்டு கொடுத்தால் அதிகமாக விற்றுக் கொடுப்பான் என்று பள்ளியில் எனக்கு விடுப்பும் கொடுத்துவிடுவார்கள். உடனே நான் புறப்பட்டு எங்கு வருவேன் என்றால், முதலில் அந்த நன்கொடை சீட்டை எடுத்துக் கொண்டு இந்த சத்யா ஸ்டுடியோவுக்குத் தான் வருவேன். ஷுட்டிங்கில் இருப்பார் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பத்மநாபன் தான் அப்போது மேனேஜர். நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவர்தான் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்-ஐ பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து ஷுட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது இடையில் அழைத்துக் கொண்டு போவார். 250 ரூபாய் டிக்கெட் வாங்கிவிடுவார், அதுதான் அப்போது இருப்பவைகளிலெல்லாம் காஸ்ட்லி. ஆக, அப்போது அளவுகடந்த பாசத்தையும், அன்பையும் கொண்டவர் நம்முடைய எம்.ஜி.ஆர்.
என்னுடைய பாட்டி, தலைவர் கலைஞரின் அன்னை அஞ்சுகம் அவர்களிடம் ரொம்ப பாசமாக இருப்பார், 'அம்மா' 'அம்மா' என்றுதான் அழைப்பார். அடிக்கடி கோபாலபுரத்திற்கு வருகிறபோதெல்லாம் அன்போடு பேசி எல்லோரிடத்திலும் பாசத்தோடு பழகுவார்.
ஒருநாள் அவர் வந்தபோது, அவரை 'சார்' என்று ஒருமுறை சொல்லிவிட்டேன். உடனே தலைவரிடத்தில் ஒரு புகார் செய்தார். உங்கள் பிள்ளை என்னைப் பார்த்து 'சார்' என்று சொல்கிறான் என்று சொல்லிவிட்டார். அதெல்லாம் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, அவருடைய படம் ரிலீஸ் ஆகிறது என்றால், தியேட்டரில் வரிசையில் நின்று, முதல் ஆள், முதல் டிக்கெட் நான்தான் சென்று வாங்குவேன். அதனால் அவர் படம் ரிலீஸ் ஆனவுடன் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு தொலைபேசி செய்து என்னை அழைத்து, படம் எப்படி இருந்தது என்று என்னிடம் கேட்பார். நான் வெளிப்படையாக இது இப்படி இருந்தது, இது அப்படி இருந்தது என்று நான் சொல்வேன். நீங்கள் இந்த சீனில் சூப்பராக நடித்தீர்கள் என்றெல்லாம் சொல்வேன். அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்.
கோபாலபுரத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இளைஞர் தி.மு.க. என்ற ஒரு அமைப்பு உருவாக்கியபோது, பல கூட்ட நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். அந்த கூட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறபோது எல்லாம் ஷுட்டிங்கிலிருந்து மேக்-அப்புடன் எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார்.
அதற்குப் பிறகு 1971-ஆம் ஆண்டு 'முரசே முழங்கு' என்று ஒரு நாடகம், இங்கே பிரசாத் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், நாடகத்தில் ஓமப்பொடி பிரசாத் என்றுதான் அவரை அழைப்போம், அதில் ஓமப்பொடி என்று அவருக்குப் பெயர். அவர் என்னோடு சேர்ந்து நடித்த 40 நாடகங்கள் தமிழ்நாடு முழுவதும் 1971-ஆம் ஆண்டு தேர்தலின்போது நடத்தப்பட்டது. அதன் முதல் அரங்கேற்றம் சைதாப்பேட்டை தேரடி திடல். யார் தலைமை, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் தலைமை. நாடகம் தெருவில் தான் போடுவோம், கொட்டாய் எல்லாம் கிடையாது. தெருவில் போட்டிருக்கிறோம், மக்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். முன்வரிசையில் எம்.ஜி.ஆரை உட்கார வைப்பதற்காக சோபா செட் போட்டு வைத்திருக்கிறோம். அவர் வந்தார், முதலில் அதை எடு என்றார். எடுத்துவிட்டோம். அப்புறம் தரையில் உட்கார்ந்து நாடகத்தை முழுவதுமாக பார்த்து என்னைப் பாராட்டி சென்றவர்தான் நம்முடைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எதற்காக என்றால், மற்றவர்களுக்கு மறைக்கக்கூடாது என்ற அந்த நினைப்புடன் கீழே உட்கார்ந்து பார்த்தார். நான் அதை நினைத்துப் பார்க்கிறேன்.
அதே நாடகத்தின் நிறைவு விழா திருவல்லிக்கேணியில் இருந்த எம்.கே.டி.கலா மண்டபத்தில் கலைஞர் தலைமையில் எம்.ஜி.ஆர் முன்னிலையில் நடைபெற்றது. அந்த நாடகத்திற்கு கலைஞர் தான் எங்களுக்கு எல்லாம் மோதிரம் போட்டார். எம்.ஜி.ஆர் எங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் கொடுத்தார். அப்போது கலைஞர், எம்.ஜி.ஆரிடம் சொல்லி, நான் சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறான், ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான், படிக்கவே மாட்டேன் என்கிறான், அவனுக்கு புத்திமதி சொல்லிவிட்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதை எம்.ஜி.ஆர் பேசுகிறபோது சொன்னார். “நீ நடிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் உன் அப்பாவுக்கு ஒரு கவலை, உன் அப்பாவுக்கு இல்லாத அந்தக் கல்வி உனக்கு வந்தாக வேண்டும், அதனால் நீ நன்றாகப் படி, பெரியப்பா என்கிற முறையில் சொல்கிறேன், நீ படிக்க வேண்டும்” என்று எனக்கு புத்திமதி சொல்லிவிட்டுச் சென்றார்.
'உனது பெயரே ஸ்டாலின். பெயரிலேயே புரட்சி தோன்றி விடுகிறது' என்று என்னை உற்சாகப்படுத்தினார். 'கலைஞரின் மகன் கலைஞனாகத்தான் இருப்பான்' என்று என்னை உச்சிமுகர்ந்து பாராட்டினார், அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
இந்தக் கல்லூரியில் நடக்கக்கூடிய இந்த விழாவில் கலந்து கொண்டு நான் இதை பெருமையோடு சொல்வதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல, நீங்கள் என்னுடைய வாழ்க்கை வரலாறை 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகத்தை படித்தீர்களென்றால் அதில் முதல் பாகத்தில் இதைப் பற்றியெல்லாம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன். ஏதோ இந்த நிகழ்ச்சியில் வந்து சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இதையெல்லாம் நான் பதிவு செய்திருக்கிறேன். பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன்.
ஆகவே, இந்த விழாவில் கலந்து கொள்வதில் என்னுடைய கடமையாக மட்டுமல்ல, உரிமையாகவே நினைத்து இந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
இப்போது நூற்றாண்டு விழா காணும் ஜானகி எம்.ஜி.ஆர்., தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர். எத்தனையோ தனித்திறமைகளைப் பெற்றிருந்தவர் அம்மையார் ஜானகி. இதை அவருடைய பெயரில் இருக்கக்கூடிய இந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சுப்புடி, மணிப்பூரி, கதக் ஆகிய கலைகளை மட்டுமல்ல, சிலம்பம் சுற்றுவதிலும், கத்திச் சண்டை போடுவதையும் கூட அந்தக் காலத்தில் முறையாக பயின்றிருக்கக்கூடியவர் அம்மையார் ஜானகி. தமிழ்நாடு முழுவதும் நாட்டிய நாடகங்களை நடத்தி பெருமைப்படுத்தியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளையும் அறிந்தவர். மிகச்சிறந்த பாடகியாகவும் இருந்திருக்கிறார், இரண்டு பாடல்களை படத்தில் அவர் பாடி இருக்கிறார். மக்கள் திலகத்தைப் போல, கொடைத்தன்மையிலும் அதை அப்படியே பின்பற்றியவர் அவர். இத்தகைய பல்துறை ஆற்றல் பெற்றிருக்கக்கூடியவருக்கு தான் இன்றைக்கு விழா நடந்து கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகிகளில் ஒருவராக விளங்கியிருக்கிறார். அப்போதெல்லாம் பெண் மேக்-அப் மேன் கிடையாது, ஆண் மேக்-அப் மேன்தான். அதனால், அவரே மேக்-அப் போட்டுக் கொள்வார். ஆக, தனக்காக மேக்-அப் போட்டுக்கொண்டு நடித்தவர் அவர். 31 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நான் தொடக்கத்தில் சொன்னதுபோல, தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக அவர் விளங்கியிருக்கிறார் என்பதற்கு அவர் ஆற்றியிருக்கக்கூடிய அந்தப் பணிகளெல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக – அம்மையார் ஜானகி கதாநாயகியாக நடித்த முதல் படம் 'மருதநாட்டு இளவரசி'. அதற்கு கதை-வசனம் எழுதியவர் தலைவர் கலைஞர். இதில் என்ன வேடிக்கை என்றால், மூன்று முதலமைச்சர்கள் பங்கெடுத்த படம் எது என்று கேட்டால் 'மருதநாட்டு இளவரசி' தான். எம்.ஜி.ஆர்., அம்மையார் ஜானகி, தலைவர் கலைஞர் மூன்று பேரும் பங்கெடுத்த வரலாறு. அந்தப் படப்பிடிப்பின்போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்று கலைஞர் எழுதியிருக்கிறார்.
எம்.ஜி.ஆரும் ஜானகியும் இணைந்து நடித்த முதல் படத்தை சொன்னேன். கடைசிப் படம் என்ன தெரியுமா? 'நாம்'. இதற்கு கதை-வசனம் யார் என்று கேட்டால், அதுவும் தலைவர் கலைஞர்தான். அதனால்தான், 'நாம்' பிரிக்க முடியாதவர்களாக இன்றைக்கு இங்கே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறோம் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். அதை உணர்த்தக்கூடிய வகையில்தான் லதா ராஜேந்திரனும், குமார் ராஜேந்திரனும் என்னை இந்த விழாவிற்கு அழைத்துள்ளனர்.
“என்னுடைய ஒரே வாரிசு ஜானகி மட்டும்தான்” என்று உயில் எழுதி வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மனைவி என்ற அடிப்படையில் மட்டுமல்ல – திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் பக்கபலமாக அவருக்கு இருந்தவர் ஜானகி அம்மையார். மக்கள் திலகம் அவர்களால் உருவாக்கப்பட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோர் குழந்தைகள் இல்லத்தை சிறப்பாக நடத்தியவர் மட்டுமல்ல - இந்த கல்லூரியையும் தொடங்கியவர் அம்மையார்.
1991 முதல் 1995 வரை, இதற்கான அனுமதியை அவரால் பெற முடியாமல் இருந்தது, அது என்ன சூழ்நிலை, எப்படி என்பதையெல்லாம் நான் விளக்க விரும்பவில்லை. ஆனால் கல்விக்காக, கருணை வடிவான ஜானகி அம்மையார் கேட்டார் என்பதற்காக தலைவர் கலைஞர் உடனடியாக அனுமதி வழங்கினார். அந்த அந்த நன்றியின் அடையாளமாகத்தான் நீங்களும் என்னை அழைத்திருக்கிறீர்கள் என்று நான் உளமாற நம்புகிறேன்.
நான் இங்கு வருவது முதல் முறையல்ல. வரவேற்புரை ஆற்றுகிறபோது சொன்னார், ஏற்கனவே நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, இங்கே ஆண்டுவிழா நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சிக்கும் வந்திருக்கிறேன். இப்போது முதல்வராக வருகை தந்திருக்கிறேன். முதல்வர் வருகிறார் என்றால், கோரிக்கை இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த அடிப்படையில், எனக்கு ஒரு கடிதம் லதா ராஜேந்திரனால் தரப்பட்டிருக்கிறது. அரசின் எண்ணம் எதுவோ, அதே நோக்கம் கொண்டதாக இந்தக் கோரிக்கைகள் அமைந்திருப்பது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.
சைகை மொழியை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் துறையை முதல்வர் என்கிற முறையில் நான் தான் கையில் வைத்திருக்கிறேன். அந்த வகையில் லதா ராஜேந்திரனுடைய கோரிக்கைகளை செயல் திட்டம் ஆக்குவோம் என்பதை இந்த நேரத்தில் நான் உறுதியோடு தெரிவித்துக் கொண்டு,
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியவர், கலைவாணர், ராஜா சாண்டோ என்கிற பெயரில் விருதுகளை வழங்கியவர், எம்.ஜி.ஆர் பெயரில் விருதுகளை வழங்கி அறிவித்தவர், பராமரிப்பு இல்லாமல் இருந்த எம்.ஜி.ஆர். நினைவிடத்தை நவீனமாகக் கட்டியவர் தலைவர் கலைஞர்தான். அந்த நட்பின் தொடர்ச்சியாகத் தான் இந்த விழா நடைபெற்று வருகிறது.
ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது, "கிரீடத்தை தலையில் சூட்டிவிட்டு, தலையை வெட்டியது போல இருக்கிறது என்று எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்துவிட்டு, ஜானகி அம்மையாரின் ஆட்சியைக் கலைத்தார்கள்" என்று அன்றைக்கு கண்டித்தவர் தலைவர் கலைஞர். அதையும் மறந்துவிடக்கூடாது.
எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அண்ணா சாலையில் இருந்த தலைவர் கலைஞர் சிலை உடைக்கப்பட்டது. உடனடியாக அம்மையார் ஜானகி, கலைஞருக்கு ஃபோன் செய்து வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தெரிவித்தது மட்டுமல்ல, “அதை நானே பொறுப்பேற்று கட்டித் தருகிறேன்” என்று சொன்னார். அந்த நல்ல உள்ளத்தை நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன்.
திராவிட இயக்கக் கொள்கைகள் மீதும், தலைவர் கலைஞர் மீதும் மாறாத பற்று கொண்ட அம்மையார், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளின் காரணமாக வளர்த்தெடுக்கப்பட்டதே இந்த நவீன தமிழ்நாடு.
இந்த அரங்கில், இத்தனை பெண்கள் குழுமி இருக்கிறீர்கள். படிக்க வந்திருக்கிறீர்கள். இந்தக் காட்சியை, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், 100 ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க முடிந்ததா என்றால் பார்க்க முடியவில்லை. இப்போது பார்க்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட இயக்கம் தான். அப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் கல்வியில், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக உழைத்த இயக்கம் திராவிட இயக்கம்.
இதனுடைய அடிப்படை லட்சியங்களின் மீது எம்.ஜி.ஆரும், ஜானகியும் பற்று கொண்டு செயல்பட்டு வந்தார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனி இயக்கம் கண்டாலும், தனது கொள்கையில், அண்ணாயிசத்தை அவர்கள் கட்டிக்காத்தார்கள். அண்ணாயிசம் என்று சொன்னால், 'சாதியற்ற, சமதர்ம, பகுத்தறிவு சமுதாயத்தை ஜனநாயக வழியில் நிறைவேற்ற உழைப்பதுதான் அண்ணாயிசம்' என்று அவரே வரையறுத்து சொல்லியிருக்கிறார். இத்தகைய அண்ணாயிசத்தில் உண்மையான பற்று கொண்டவர்கள் அனைவருக்கும் திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது. அதனை நினைவூட்டக்கூடிய வகையில்தான் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்பதும், அதன் மூலமாகத் தமிழ்நாட்டை மேன்மையடையச் செய்வதும்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி அம்மையாருக்கும் நாம் செய்யக்கூடிய மரியாதையாக இருக்கும், அதுதான் நம்முடைய நன்றிக்கடனாக இருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago