நாகர்கோவில் | 3 நாட்கள் போலி பெயரில் தங்கிய ஷரீக்: விடுதி ஊழியர்களிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கர்நாடக மாநிலம் மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷரீக் நாகர்கோவிலில் 3 நாட்கள் தங்கியிருந்துள்ளார். அவர் தங்கியிருந்த விடுதியின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் மங்களூரு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

மங்களூருவில் கடந்த 19-ம் தேதி நடந்த ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஷரீக் என்ற இளைஞர் சிக்கினார். ஷரீக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள், அவர் சென்று வந்த இடங்களில் என்ஐஏ மற்றும் உளவுத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் நாகர்கோவிலில் 3 நாட்கள் ஷரீக் தங்கியிருந்துள்ளார். ஆனால், அவர் தங்கியிருந்த இடம் உறுதி செய்யப்படாமல் இருந்தது. மங்களூரு காவல் ஆய்வாளர் நிரஞ்சன்குமார் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தனர்.

ஷரீக் தங்கியிருந்த விடுதியை அவர்கள் உறுதி செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தமிழகம், கேரளாவில் ஷரீக் சுற்றித் திரிந்ததும், செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து 3 நாட்கள் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

பிரேம்ராஜ் என்ற பெயரில்.. அந்த விடுதியின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் மங்களூரு போலீஸார் நேற்று சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பிரேம்ராஜ் என்ற பெயரில் ஷரீக் அறை எடுத்து தங்கியதும், 2 நாட்கள் வெளியே சென்று வந்ததும் தெரியவந்தது. கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளுக்கு ஷரீக் சென்று வந்துள்ளார்.

எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சதிச் செயலில் ஈடுபட ஷரீக் திட்டமிட்டாரா? இங்கு அவர் யாரையெல்லாம் சந்தித்தார்? என்று விசாரணை நடத்தப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE