மீனவர் பிரச்சினையில் கடிதம் எழுதுவதை தவிர ஆக்கபூர்வ நடவடிக்கை இல்லை: திமுக அரசு மீது சீமான் சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்தி, கட்சத்தீவினை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து சிறைப்படுத்தியிருப்பது அம்மீனவர்களின் குடும்பத்தினரிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தி விரட்டியடித்த இலங்கை ராணுவம் தற்போது, மீண்டும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 24 பேரை கைது செய்திருப்பதோடு, அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படுவதும், தாக்கப்படுவதும், உடைமைகள் பறிக்கப்படுவதும், சுட்டுக்கொலை செய்யப்படுவதுமென இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய கொடுமைகளும், அட்டூழியங்களும் தொடர்ந்து வருவது ஆளும் அரசுகளின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தொடர் வன்முறைத் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைப்பிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல. இலங்கை ராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைப்படுத்தி வருவது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து, முடமாகி நிற்கிறார்கள். 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலிலே கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றி எச்சரித்ததுமில்லை. இதன்விளைவாகத்தான், இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பது என்பது தொடர்கதையாக மாறி வருகிறது.

தமிழக மீனவர்கள் மீதான இத்தாக்குதல்களுக்கு மறைமுக ஆதரவளிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலானது தமிழர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்களை இந்திய பெருநாடு வெட்கமின்றி வேடிக்கைப் பார்ப்பது எட்டுகோடி தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதுவதை தவிர, எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப்போக்கு தமிழக மீனவர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, இந்திய ஒன்றிய அரசு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்தி, கட்சத்தீவினை மீட்க விரைந்து நடவடிக்கை வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்