அரியலூர்: "ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது – ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த கால ஆட்சி.தனது கையில் அதிகாரம் இருந்தபோது - கைகட்டி வேடிக்கை பார்த்து - தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி – பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள் இந்த ஆட்சி குறித்து புகார்கள் கொடுக்கிறார்கள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.30.26 கோடி செலவில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக அம்மோனைட்ஸ்கள் குறித்த கண்காட்சி அரங்கினையும், மாளிகைமேடு அகழாய்வு பொருட்கள் அடங்கிய கண்காட்சி அரங்கினையும் பார்வையிட்டார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர்: " மாமன்னர் ராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில், கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும் சிறந்த வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும், உலகுக்குப் பறைசாற்றும் வகையில், நான் நேற்று பார்த்து, கண்டு வியந்ததை மக்கள் அனைவரும் காணவேண்டும் என்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சி பொங்க நான் அறிவிக்கின்றேன். பத்து ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.அதனை உடனே நடத்தி விட முடியுமா என்ற மலைப்பு கூட எங்களுக்கு முதலில் இருந்தது. ஆனால் அத்தகைய பாதாளத்தில் இருந்து தமிழகத்தை பல்வேறு வகைகளில் மீட்டெடுத்துவிட்டோம் என்பதுதான் உண்மை.
» அரவக்குறிச்சி அருகே பழமையான வீடு இடிந்து விழுந்து விபத்து: மூதாட்டி சடலமாக மீட்பு
» தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
போட்டி போட்டுக்கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு தமிழகத்திற்கு வருகிறது.ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம். வேளாண்மை உற்பத்தி அதிகமாகி இருக்கிறது. வேளாண் பாசனப் பரப்பு வசதி அதிகமாகி இருக்கிறது. உயர்கல்வியிலும், பள்ளிக் கல்வியிலும் பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறோம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தித் தந்ததன் மூலமாக பெண்களுக்கு நிரந்தரமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்னால் மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருக்கக் கூடிய பேராசிரியர் ஜெயரஞ்சன் என்னிடத்தில் ஒரு அறிக்கையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். திமுக ஆட்சி மலர்ந்ததும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தோம். அந்த திட்டத்தின் மூலமாக மகளிர் சமுதாயம் எத்தகைய பயனை அடைந்து வருகிறது என்பது குறித்த அந்த ஆய்வறிக்கையை கொண்டு வந்து கொடுத்தார்.
பேருந்துகளில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பதால் மாதத்துக்கு சுமார் தொள்ளாயிரம் ரூபாய் சேமிக்க முடிகிறது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ஏழை எளிய பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். இதனால், மாத வருமானத்தில் பெருமளவு பணத்தை சேமிக்க முடிகிறது என்றும் - இந்த சேமிப்புப் பணத்தை குடும்பத்தின் வளர்ச்சிக்காகச் செலவு செய்ய முடிகிறது என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். சில்லறை பணவீக்கத்தில் இருந்து பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க இத்திட்டம் உதவுவதாக பிரபலமான 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேடு எழுதி இருக்கிறது. ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக கோடிக்கணக்கான மகளிர் சமுதாயத்தின் மனதில் மகிழ்ச்சியை விதைக்க முடிந்திருக்கிறது.
பதினைந்து மாத காலத்தில் ஒன்றரை இலட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பாற்ற அனைத்தையும் செய்திருக்கிறோம். கரோனாவை வென்று காட்டினோம். மழை- வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். நேற்றுகூட, பெரம்பலூர் மாவட்டத்தில், காலணி உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, புதிய சிப்காட் தொழிற்சாலையை திறந்து வைத்தேன்.
அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நம்மைவிட மக்கள்தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாநிலங்கள் கூட தொழில்வளர்ச்சியில் நமக்குக் கீழேதான் இருக்கிறது.
கடந்த ஆட்சியில், பத்தாண்டு காலம் தொழில் வளர்ச்சியில் தேக்க நிலை நிலவினாலும், அதற்கு முன்பு, தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு போட்ட அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக எட்டு கால் பாய்ச்சலில் நாம் ஈர்த்து வரும் முதலீடுகளாலும் பெற்ற பெருமைதான் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். நான் இப்போது கூறிய இரண்டுமே தனித்தனி நிகழ்வுகள் அல்ல. ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற இலக்கின் வெவ்வேறு பரிமாணங்கள்தான் இவை.
நான் முதல்வன் திட்டமானாலும்; ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 200 கோடி ரூபாயில் தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்துவதானாலும்; பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும், நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளானாலும்; புதிதாக வளர்ந்து வரும் உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதானாலும்; நான்காம் தொழிற்புரட்சியை ஒட்டிய முயற்சிகள் ஆனாலும் – அனைத்துமே நம் இலக்கை நோக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடலின் அங்கங்கள்தான். இத்தகைய தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிட்டால்தான், இலக்கை அடையமுடியும்.
இதில் அரியலூர், பெரம்பலூர் என அனைத்து மாவட்டங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பயன்பெற வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம்.இவை அனைத்தும், ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக அரசு நடத்திக் காட்டும் செயல்கள்.
ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது – ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த கால ஆட்சி.தனது கையில் அதிகாரம் இருந்தபோது - கைகட்டி வேடிக்கை பார்த்து -தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி – பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள் போய், யாரிடம், உங்களுக்கு தெரியும், பேட்டிகள் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள்.'உங்கள் யோக்கியதைதான் எங்களுக்குத் தெரியுமே' என்று ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம். "புலிக்கு பயந்தவன், என் மேல வந்து படுத்துக்கோ" என்று சொல்வார்களே, அதுபோல சிலர் "ஆபத்து – ஆபத்து" என்று அலறிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிச் சொல்லும் சிலருக்கு, 'இருக்கும் பதவி நிலைக்குமா' என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள்.
மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது, கவலைப்படாதீர்கள். விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை அவர்களுக்கு இருக்க வேண்டும்.
தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப் போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடையத்தான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளோடு நான் பணியாற்றுகிறேன். அந்தக் குறிக்கோளை அடைய என்னை ஒப்படைத்துக் கொண்டு நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழகம் அத்தகைய உயரத்தை விரைவில் அடையும்" என்று பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago