மின்னணு கட்டண முறையை அமல்படுத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை
பண மதிப்பு நீக்கத்தால் நீதி மன்றங்களில் முத்திரைத் தாள் களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக சொத்து மதிப்புள்ள அவசர சிவில் வழக்குகளை உடனுக்குடன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் நீதித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் உரிமையியல் தொடர்பான வழக்குகளைத் தொடர அதற்கான நீதிமன்ற கட்டணத்தை முத்திரைத் தாள்களாகவும், நீதிமன்ற முத்திரைகளாகவும் செலுத்த வேண்டும். குற்றவியல் வழக்குகளைக் காட்டிலும், உரிமையியல், குடும்ப நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் காசோலை வழக்குகளில்தான் முத்திரைத் தாள்களின் பயன்பாடு அதிகம். இந்த வழக்குகளை தாக்கல் செய்ய குறிப்பிட்ட காலவரையறையும் உள்ளது.
ரூ. 25 லட்சம் மற்றும் அதற்கு குறைவான பண மதிப்புடைய சிவில் வழக்குகளை கீழமை நீதிமன்றங்களிலும், அதற்கு மேல் உள்ள வழக்குகளை உயர் நீதிமன்றம் அல்லது அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் 7.5 சதவீதமும், உயர் நீதிமன்றத்தைப் பொருத்தமட்டில் முதல் ஒரு லட்சத்துக்கு ரூ. 4 ஆயிரத்து 525-ம், எஞ்சிய தொகைக்கு 1 சதவீதமும், நீதிமன்ற முத்திரைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் நீதிமன்றங் களில் முத்திரைத் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக விலை மதிப்புள்ள சொத்து பிரச்சினை தொடர்பான சிவில் வழக்குகளை உடனுக்குடன் தாக்கல் செய்ய முடியாமல் வழக்கறிஞர்கள் தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
வழக்கறிஞர் கே.அழகுராமன்:
நீதித்துறையைப் பொருத்த மட்டில் வழக்குகளின் தாக்கல் மிகவும் முக்கியம். ஆனால் தற்போது ரூ.500 மற்றும் ரூ.1000 பழைய நோட்டுகளை முத்திரைத்தாள் முகவர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட மதிப்புக்கு முத்திரைத் தாள்களை உடனடியாக வாங்க முடியாமல் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து வழக்கு களையோ, அவசரமாக தடை யாணை பெற வேண்டிய வழக்குகளையோ தாக்கல் செய்ய முடியவில்லை. இதற்கு மாற்றாக நீதித்துறையிலும் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
வழக்கறிஞர் மீரா ரமேஷ்குமார்:
குடும்ப நல வழக்குகளைப் பொருத்தமட்டில் ஜீவனாம்சம் என்பது பாதிக்கப்படும் பெண் களுக்கு மாதந்தோறும் கிடைக்கும் சிறு நிவாரணம். ஆனால் தற் போது உள்ள சூழலில் இந்த தொகையை ரொக்கமாக பெற முடியாமல், காசோலையாக பெற வேண்டியுள்ளது. இதிலும் பல காசோலைகள் பணமின்றி திரும்புகின்றன. இதனால் விவா கரத்து வழக்கு தொடர்ந்துள்ள பெண்கள் மாதாந்திர ஜீவனத் துக்கு பணமின்றி சிரமப்படு கின்றனர்.
ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப் பீட்டுத் தொகை நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. அதுபோல ஜீவனாம்சம், செட்டில்மென்ட் போன்ற உரிமை யியல் சார்ந்த அனைத்து பணப் பரிமாற்றங்களையும் மின்னணு முறையில் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தினால் பொது மக்களுக்கு பலன் கிடைக்கும்.
வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன்:
பதிவுத்துறையில் மின்னணு முறையில் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தும் முறை வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. அதுபோல நீதித்துறையிலும் முத்திரைத் தாள்களை முழுமையாக ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக உயர் நீதிமன்றமே ஒரு முன்மாதிரி பண வசூல் மையம் அமைத்து நேரடியாக மி்ன்னணு முறையில் நீதிமன்ற கட்டணத்தை வசூலிக்கக்கோரி கடந்த 2015-ல் வழக்கு தொடர்ந்துள்ளேன். அப்படி வசூலித்தால் வழக்குகளை தாக்கல் செய்யும் நடைமுறை இன்னும் வேகமாகும், எளிதாகும்.
வழக்கறிஞர் ஆர்.பூர்ணிமா:
தற்போது முகவர்களிடம் எங்களது காசோலைகளைக் கொடுத்து முத்திரைத் தாள்களை வாங்குகிறோம். அந்த தொகைக்கும் நாங்கள்தான் கணக்கு காட்டியாக வேண்டும். இப்படி பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதுவே மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணத்தை செலுத்தினால் வழக்கறிஞர்கள் மீதான வீண் சந்தேகம் பொதுமக்களுக்கும் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் மின்னணு முறையில் ‘இ-பேமென்ட்டாக’ நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்த உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, புதிய சட்ட திருத்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை விரைவில் அமல்படுத்துவது தொடர்பாக அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 secs ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago