மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் - பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கில் முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் உலகத் தரத்திலான மெகா ஜவுளி நகரம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் துணி நூல் துறை,மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு தொடக்க விழா, சென்னை மணப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், தொழில் துறை தொடர்புடைய 12 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கருத்தரங்கை காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் போட்டி என்பது இந்திய மாநிலங்களுக்கு இடையே மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித் துறை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 31 லட்சம் தொழிலாளர்களுக்கு ஜவுளித் துறை நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் ரூ.2.50 கோடி அரசு மானியத்துடன் உருவாக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் ஜவுளி நகரம்அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல, புதிய இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய ரூ.29.34 கோடியில் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் கிராமத்தில் 1,500 ஏக்கரில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்க சிப்காட் நிறுவனம் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உலகத் தரத்திலான மெகா ஜவுளி நகரை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். அதேபோல, மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.10 கோடியில் நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உள்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் நிறுவவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில், கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற தமிழக அரசின் இலக்கை அடைய இந்தக் கருத்தரங்கம் உதவும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

கருத்தரங்கில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, "60 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஜவுளித் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். ஜவுளித் தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் விரைவில் சிறப்புத் திட்டம் குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, "ஜவுளித் துறையில் புதிய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் கயிறு மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்பட உள்ளன’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும்துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழில் துறைச்செயலர் எஸ்.கிருஷ்ணன், கைத்தறித் துறைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறைச் செயலர் அருண் ராய், மத்திய ஜவுளித்துறை இணைச் செயலர் ராஜீவ் சக்சேனா, துணி நூல் துறை ஆணையர் எம்.வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்றும் (நவ. 26) ஜவுளி கருத்தரங்கு நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்