சென்னை: நுகர்வோரின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மின்நுகர்வோர் பலரும் மின்வாரிய இணையதளத்துக்கு சென்று, தங்கள் மின்இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. இதன் காரணமாக ஆதார் எண்ணை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், மின்கட்டணத்தையும் கட்ட முடியாததால், பலரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதுதொடர்பாக நுகர்வோர் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, நவ.24 முதல் 30-ம் தேதிக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் மின்கட்டணம் செலுத்த 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின்வாரியம் அறிவித்துள்ளது.
எனினும், ஏராளமானோர் தங்கள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களிலும் நேற்று குவிந்தனர். இதனால், மின்வாரியத்தின் இணையதள சேவை முடங்கியது.
இதுகுறித்து மின்நுகர்வோர் சிலர் கூறியபோது, ‘‘மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆன்லைனில் கடந்த 4 நாட்களாக முயன்றும், இணைக்க முடியவில்லை. நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தால், இணையதள சர்வர் டவுன் ஆகிவிட்டது என்று கூறி, சிறிது நேரம் கழித்து வருமாறு திருப்பி அனுப்பி அலைக்கழிக்கின்றனர். தவிர, இணைப்பு பணிக்கு சராசரியாக ஒரு நபருக்கு குறைந்தபட்சம் அரை மணி முதல் முக்கால் மணி வரை ஆகிறது. இதனால், மணிக்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது. தவிர, அவசர அவசரமாக ஆதார் எண்ணை இணைப்பதால் நுகர்வோருக்கு பல்வேறு சந்தேகம் எழுகிறது. ஆதார் எண்ணை இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் வரையிலான மானியம் ரத்தாகுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றனர்.
மின்துறையில் சீர்திருத்தம் செய்ய ஆதார் இணைப்பு அவசியம்: அமைச்சர் செந்தில்பாலாஜி
மின்துறையில் சீர்திருத்தம் செய்ய ஆதார் இணைப்பு அவசியம் என மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அதிமுக எம்எல்ஏக்களை அழைத்தும் அவர்கள் கலந்து கொள்வதில்லை. சிறு, குறு தொழில் முனைவோருக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் உத்தேசிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்குமாறு கேட்டார்கள்.
ரூ.2,500 கோடி கட்டணத்தை குறைத்து இருக்கிறோம். கடன் இருக்கும் நிலையிலும், மின்வாரியம் குறைந்த அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களின் மின்கட்டணங்களை விட இங்கு கட்டணம் குறைவு. நிலைக்கட்டணம், பீக் ஹவர் போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. குறைத்துக் கொடுங்கள் என கேட்பதுதான் சரியாக இருக்கும். மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
தொழில் முனைவோர் மின்வாரியம் நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு ஆதரவைக் கொடுத்து முழுமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். மின் வாரியம் கடனில் இருக்கிறது. தொழில்துறை தரப்பைமட்டும் பார்க்காமல் இரு தரப்பையும் பார்க்க வேண்டும். நடப்பாண்டில் மட்டும் கர்நாடகாவில் மூன்றுமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்கட்டணம் செலுத்த ஆதார்கார்டு இணைப்பு குறித்து அதிமுக, பாஜகவினர் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆதார் எண் இல்லை என்றாலும் இப்போது கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். பெயர் மாற்றம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மின் துறையில் சீர்திருத்தம் செய்ய ஆதார் இணைப்பு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago