புதுடெல்லி: ‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தாக்கல் செய்த புகைப்படங்கள் யதார்த்த நிலைக்கு முரணாக உள்ளது. எனவே அவற்றை ஏற்கக் கூடாது’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, விலங்குகள் நல அமைப்பின் (Compassion Unlimited plus action) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, கர்நாடகாவில் நடைபெறும் கம்பாலா, தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிராவின் - ரேக்ளா ஆகியவை தொடர்பான சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
மேலும், “எதன் அடிப்படையில் இந்தச் சட்டங்கள் அனுமதிக்கப்பட்டன என்பதே கேள்வியாக உள்ளது. ஜல்லிக்கட்டு உள்ளிட்ட மிருகங்களைக் கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது ஒரு மாட்டின் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து அதனை அடக்க முயல்வது. இதில் ஏராளமான மாடுகள் காயம் அடைகின்றன. இதுதொடர்பான ஆவணங்கள், புகைப்படங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் வாதிட்டார்.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, "விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக ஜல்லிக்கட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்படங்களும், ஆதாரங்களும் எந்தவிதமான ஆய்வும் செய்யாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது" என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
அப்போது விலங்குகள் நல அமைப்பு தரப்பில், "இந்த ஆதாரங்களை முதல்முறையாக தாக்கல் செய்யவில்லை. இதற்கு முன்னரும் பல முறை வழக்குகளில் தாக்கல் செய்ப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டின் தன்மை குறித்து விளக்கவே இதனை நீதிமன்றத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "சட்டம் சார்ந்த விவகாரத்தை மட்டுமே விவாதிக்கப் போகிறோம். விளையாட்டுக்களை அனுமதிக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருப்பதை ஆய்வு செய்வதற்குதான் நாங்கள் இங்கு இருக்கிறோம்" என்று விளக்கம் அளித்தனர்.
அப்போது, தமிழக அரசு தரப்பில், "இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள எந்த மனுவிலும் சட்ட வரைவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து எந்த கோரிக்கையையும் வைக்கப்படவில்லை. எனவே, இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல" என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மிருக வதைச் சட்டம் என்ற தலைப்பு இருப்பதற்காக, அதை மிருகங்களை கொடுமைப்படுத்தக் கூடாது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. கொசு நம்மை கடித்தால் அதை அடிப்போமா அல்லது அமைதியாக பார்த்துக்கொண்டிருப்போமா? அதை கொன்றால் மிருக வதையின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவோமா? எனவே, வதை என்பது ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது . ஏனெனில், மிருகங்களுக்கான உரிமை என்பது மனிதர்களுக்கு இருப்பது போன்றது அல்ல. ஒரு பாம்பு கடிக்க வந்தால் என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது விலங்குகள் நல அமைப்பு தரப்பில், "பாம்பு போன்ற வன உயிரினங்களை பாதுகாக்க "வன உயிர் பாதுகாப்பு சட்டம்" உள்ளது. அந்தச் சட்டம் மிக கடுமையானது. எனவே பாம்பு கடிக்க வந்தால், அதனை அடிப்பதை விட ஓடி தப்பித்துக் கொள்வதே சிறந்தது. ஒருபுறம் விலங்குகளை காட்சி பொருளாக பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு சட்டம் கூறுகிறது. ஆனால் ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்றவற்றை அனுமதித்து மாநில அரசின் சட்டங்கள் உள்ளன. இது முற்றிலும் முரணாக உள்ளது" என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற விளையாட்டுகள் நடக்கும்போது அதற்காக டிக்கெட் விற்கப்படுகிறதா? திரைப்படங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுகிறது. அவை காட்சிப்படுத்துவதற்கான விலங்குகளாக இருந்தாலும் இல்லையென்றாலும் அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை உறுதி செய்வதற்கான சட்டங்களாக எவை உள்ளன? இத்தகைய விஷயங்களுக்காக மட்டும்தான் அந்த விலங்குகள் பயன்படுத்தப்பட வேண்டுமென ஏதாவது விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறதா?" என கேள்வி எழுப்பினர்.
அப்போது விலங்குகள் நல அமைப்பு தரப்பில், "மிருக வதைச் சட்டத்தில் பிரிவு 21-ல் காட்சிப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலும், பிரிவு 22-ல் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், பிரிவு 22 என்பது நடைமுறையில் அமலில் இருக்கும்போது, பிரிவு 21 என்பது இதற்கு பொருந்தாது. மேலும் கண்காட்சி என்றாலே டிக்கெட் விற்பனை என்ற அர்த்தத்தை கொடுக்கும். அதேவேளையில் டிக்கெட் இல்லாமல் காட்சிப்படுத்துவது மிருகச் வதை சட்டத்தின் பிரிவு 11-ன் கீழ் வருகிறது.
குறிப்பாக, கட்சிப்படுத்தல் என்பது டிக்கெட் இல்லாமல்கூட நடைபெறுகிறது. அந்த வகையில்தான் கம்பாலா, ஜல்லிக்கட்டு போன்றவை வருகின்றன. தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டம் மிருகங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கையாளவோ, தடுப்பதாகவோ இல்லை. அந்தச் சட்டத்தின் கொள்கை என்பது மத்திய அரசின் சட்டமான விலங்குகளை காட்சிப்படுத்துவதை தடுக்கும் சட்டத்தை நீர்த்துப்போக செய்கிறது. இந்த விளையாட்டுகளில் மனித உயிர்களும் பறிபோகின்றன" எனறு வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "குத்துச்சண்டை பற்றி ஏதாவது தெரியுமா? குத்துச்சண்டையில் கூட உயிரிழக்கின்றனர்? அதேபோல் தான் இந்த விளையாட்டில் ஈடுபடும் விலங்குகளும் ஒரு கட்டத்தில் தனது சுதந்திரத்தை பயன்படுத்துகிறது. குதிரைப் பந்தயம், யானை பந்தயம் நடத்துவதை அந்த விலங்குகள் மகிழ்வாக ஏற்கின்றனவா?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விலங்குகள் நல அமைப்பு வழக்கறிஞர், "ஒரு மிருகம் தனது வாழ்வுக்காக சண்டையிடுவது வேறு. ஒரு மிருகத்துக்கு பயத்தை உண்டாக்கி அதனை சண்டையிட தூண்டுவது, நிர்பந்தம் செய்வது என்பது கொடுமையானது. அது பிரச்சினைக்குரியது.குறிப்பாக இந்த ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட விளையாட்டில் கேளிக்கைக்காக அந்த மிருகத்தின் கோபத்தை தூண்டுகின்றனர். விலங்குகள் நமது நண்பர்கள். அவற்றை காட்சிப்படுத்துவோ, துன்பப்படுத்தவோ அதை வைத்து கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவோ கூடாது. மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்" என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "அப்படியெனில் குத்துச்சண்டை, வாள் சண்டை போன்ற மனிதர்கள் ஈடுபடும் சண்டையில் கூட ஒருவருக்கொருவர் துன்பப்படுத்துதல் என்பது இருக்கிறது. குத்துச்சண்டையில் சமயத்தில் போட்டியாளர்கள் இறந்தே கூட போகின்றார்களே?" என்றனர்.
அப்போது விலங்குகள் நல அமைப்பு, "கலாச்சார உரிமை, பண்பாட்டு உரிமை என்ற காரணத்தை வைத்து அரசியல் சாசனத்துக்கு எதிரான, முரணை அனுமதிக்க முடியுமா? இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, மிருகத்தை மனிதர்கள் மேல் அவிழ்த்து விடுவதால் அது என்ன செய்யப் போகிறது? அது போராடும் அல்லது அவர்களை காயப்படுத்துமே தவிர வேறு என்ன செய்ய முடியும். மாடுகள் துன்புறுத்தப்படுவது, விதிகள் மீறப்படுவது, காயம் ஏற்படுவது உள்ளிட்டவை தொடர்பான பல புகைப்படங்களை நீதிமன்றம் பார்க்க வேண்டும்" எனக் கூறி சில புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
அப்போது தமிழக அரசு தரப்பில், "இந்தப் புகைப்படங்களில் பல யதார்த்தத்தை விட முரணானதா உள்ளது. அவை எப்போது எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என்பதும் தெரியாது. எனவே, ஜல்லிக்கட்டு தொடர்பான காணொளியை கண்டால் மட்டுமே அதனை புரிந்துகொள்ள முடியும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், 1.11 லட்சம் மாடுகள் பங்கேற்றுள்ளன. அதில் எத்தனை மாடுகளுக்கு காயம் ஏற்பட்டது? எத்தனை மாடுகள் உயிழந்துள்ளன என்பது உள்ளிட்ட விவரங்களை மனுதாரர் தெரிவிக்க வேண்டும். ஏனெனில். இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் மாடுகளுக்கு பல்வேறு தகுதிகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், உரிய விதிமுறைகளின்படியே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. எனவே, இதுபோன்ற புகைப்படங்களை ஏற்கக் கூடாது" என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "இதுபோன்ற சில புகைப்படங்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகிறது என்ற முடிவுக்கு வர முடியாது. மேலும், இவை விதிகளை மீறியவை என்று நிரூபிக்க போதுமான ஆதாரமாக இல்லை" எனக் கூறி இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago