தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அழகிரியை மாற்ற கார்கே மறுப்பு: முன்னாள் தலைவர்கள் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை உடனே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்காததால், டெல்லியில் முகாமிட்டுள்ள மூத்த தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் வலுத்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை நீக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கடந்த 20-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றனர்.

அன்று இரவு கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, ‘சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடந்த விரும்பத்தகாத நிகழ்வுக்காக அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். இளம் நிர்வாகியை மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

அதற்கு கார்கே, ‘‘கடந்த 15-ம் தேதி நடந்த நிகழ்வுகள் தொடர்பாக அன்றே அறிக்கையும், அதுதொடர்பான வீடியோக்களும் கட்சி தலைமைக்கு வந்துவிட்டன. நான் இப்போதுதான் புதிதாக பதவியேற்றுள்ளேன். தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை வெற்றிபெறச் செய்வதில்தான் முழு கவனம் செலுத்தி வருகிறோம்.

அதன் பிறகே ராகுல் காந்தியுடன் ஆலோசித்து, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள், நிர்வாகிகள் நியமனம் போன்ற பணிகள் தொடங்கப்படும். இப்போதைக்கு தமிழகத்தில் நடந்துவரும் உள்கட்சி விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’’ என்று கைவிரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் தேசிய செயலாளர் பெ.விஸ்வநாதன், ரூபி மனோகரன் ஆகியோர் நேற்று டெல்லி சென்று மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, முன்னாள் தலைவர்களின் அதே கோரிக்கையை இவர்களும் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி கேட்டபோது, தேசிய செயலாளர் பெ.விஸ்வநாதன் கூறியதாவது: தமிழக அரசையும், கூட்டணியில் உள்ள காங்கிரஸையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் குறை கூறிவருகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான காங்கிரஸ் தலைவர் தமிழகத்துக்கு தேவை.

நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸுக்காக உழைத்து வருகிறேன். தேசிய செயலாளர், கேரள மாநில பொறுப்பாளராக இருக்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவராக ஒரு தலித் பதவியேற்று 44 ஆண்டுகள் ஆகின்றன. அதனால் தலித் சமுதாயத்தை சேர்ந்த எனக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என கார்கேவிடம் கோரிக்கை வைத்தேன். பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE