சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு, அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010-ம்ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்கக் கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாததால், சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி மஞ்சுளாமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர்பாபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கை ரத்து செய்தஉத்தரவை திரும்பப் பெறக்கூடாது என வாதிட்டார்.

காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘புகார்தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’’ என்றார். இதையடுத்து, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய சிவசங்கர் பாபாவின் மனுவை இறுதி விசாரணைக்காக நவ.29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE