வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அத்துமீறலா? - அதிமுகவினர் கண்காணிக்க இபிஎஸ் அறிவுரை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஆளுங்கட்சி விதிமீறல் உள்ளதா என கண்காணிக்குமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103, பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321, மூன்றாம் பாலினத்தவர் 7,758 பேர் என மொத்தம் 6 கோடி 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் அதிமுகவினர் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். அத்துடன், இந்தப் பணிகளில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் இருக்கிறதா என கட்சி நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும். அத்துமீறல் இருப்பது தெரியவந்தால், உடனுக்குடன் அது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கட்சி சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில் உடனே முகவர்களை நியமித்து, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை அளிக்க வேண்டும் என்றும் பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE