டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த தயார்: அண்ணாமலை 

By செய்திப்பிரிவு

நீலகிரி: "தமிழக முதல்வர் எழுத்துப்பூர்வமாக டேன்டீ எங்களுக்கு வேண்டாம். இந்த 5315 ஏக்கரை மத்திய அரசே எடுத்துக் கொள்ளுங்கள், மத்திய அரசே இந்த நிறவனத்தை நடத்துங்கள் என்று எழுதி தந்தால், டேன்டீயை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு தயார்" பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில், டேன்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காக தமிழக பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: "கூடலூர் என்பது திமுகவின் கோட்டை என்று சொல்வார்கள். கூடலூர் மக்கள் பாஜகவுக்கு இதுவரை வாக்களிக்கவில்லை என்று சொல்வார்கள். ஆனால், இன்று இங்கு வந்து பார்த்திலிருந்து, இனி எப்போது தேர்தல் வந்தாலும் இது பாஜகவின் கோட்டையாக மாறும் என்பதிலே எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இதன்மூலம் பாஜக மற்றும் அதன் தலைவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருப்பதை காணமுடிகிறது.

தமிழகத்தில் இருக்கின்ற சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை கிழக்கிந்திய கம்பெனிக்காக பிரிட்டிஷார் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் சென்றனர். 1823-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து முதல் முறையாக 199 வருடங்களுக்கு முன் இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட போது, இந்தியா திரும்பிய தமிழர்களுக்கு தமிழகத்தில் குடியுரிமை வழங்கி அவர்களுக்கு வேலை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் டேன்டீ நிறுவனம். இந்நிறுவனத்தை மூடப்போவதாக தமிழக அரசு ஒரு சிக்னல் கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட டேன்டீக்கு கீழ் வரக்கூடிய 5315 ஏக்கரில் தேயிலை விளைச்சல் குறைவாக இருக்கிறது. இந்நிலங்களின் தன்மை மாறியிருக்கிறது. எனவே அந்த இடத்தை வனத்துறை வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பித்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இது இரண்டாவது முறையாக இழைக்கப்பட்டுள்ள அநீதி. 1948-ல் இலங்கை அரசு எப்படி ஒரு அநீதியை இழைத்ததோ, 2022-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த இரண்டாவது அநீதியை இழைத்திருக்கிறார். இலங்கை அரசு செய்ததற்கும், ஸ்டாலின் அரசு செய்ததற்கும் என்ன வித்தியாசம். இலங்கை அரசு செய்த அதே தவறை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று செய்திருக்கிறார். 700 பேர் வேலை இழந்துவிட்டார்கள். அவர்களை மிரட்டி கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் என்று மாநில அரசு கூறுகிறது. தேயிலைத் தோட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேறாதவர்கள் வீடுகளில், 15 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இன்னமும் அங்கே பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். அதனால்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்ற உடனே அங்கு வசிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தந்தார். வடக்குப் பகுதியில் இருக்கின்ற தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தந்தார். தமிழர்களுக்கு இதையெல்லாம் செய்துவிட்டு பேசுகிறோம். பேசுவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது.

இப்போதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சொல்வது, டேன்டீ வேண்டாம் என்று சொல்லுங்கள். நாங்கள் அதை எடுத்துக் கொள்கிறோம். அது எங்களுடைய பொறுப்பு. எழுத்துப்பூர்வமாக தமிழக முதல்வர் டேன்டீ எங்களுக்கு வேண்டாம். இந்த 5315 ஏக்கரை மத்திய அரசே எடுத்துக் கொள்ளுங்கள், மத்திய அரசே இந்த நிறவனத்தை நடத்துங்கள் என்று எழுதி தந்தால், நாங்கள் தயார். டேன்டீயை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு நாங்கள் தயார்.

இலங்கையிலிருந்து தமிழகம் வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக திராவிடக் கட்சிகள் நடத்துகின்றனர். ஆனால் பிரதமர் அண்டை நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு 60 ஆயிரம் வீடுகளைக் கட்டி கொடுத்துள்ளார்" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்