‘வெங்காரமூடு’ என்றபடியே ஆட்டோவில் ஏறி அமர் கிறோம். பேரம் பேச வில்லை. சுமார் ஏழெட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வெங்காரமூடு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு 20 ரூபாய் வாங்கிக்கொள்கிறார் ஆட்டோ ஓட்டுநர். பேருந்து கிளம்பு கிறது. மலைப் பாதை வளைவுகளில் ஏறி இறங்குகிறது பேருந்து. திருவனந்தபுரம் மாவட்டம் பெரும் பாலும் மலைப் பாங்கான பூமியாக இருக்கிறது. இதோ ஊர் வருகிறது. பெரியதாகவும் அழகாகவும் இருக் கின்றன பழங்காலத்து ஓட்டு வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பலா மரங்கள் சூழந்த தோட்டங்கள் இருக்கின்றன. வீடுகளை ஒட்டியபடி நீரோடை வழி கிறது. அழகிய ஓவியம் போலிருக் கிறது கிளிமானூர். ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஊர் அல்லவா இது!
அட்சரத் சுத்தமாக தமிழ் பேசுகிறார் கிளிமானூர் பஞ்சாயத்துத் தலைவர் ராஜலட்சுமி. “நான் கோட்டயம் தமிழ் வழிக்குடும்பம். பாதி மலையாளி; பாதி தமிழர். பத்தே நிமிஷம், இந்த சாட்சிப் பத்திரங்கள்ல கையெழுத்துப் போட்டுட்டு வந்துடறேன்...” என்கிறார். கேரளத்தின் கிராமப் பஞ்சாயத்துக்களில் சாட்சிப் பத்திரங்கள் சட்டரீதியாக மதிப்பு மிக்கவை. இலவச வீடு, முதியோர் உதவித் தொகை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வறுமைக்கோட்டுச் சான்று, அவசர அறுவை சிகிச்சை போன்ற விஷயங்களில் இவர்கள் கையெழுத்திட்டு தரும் சாட்சிப் பத்திரமே போதுமானது. அவ்வளவு சீக்கிரம் அதிகாரிகள் இதனை அலட்சியம் செய்ய இயலாது. சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் கேட்கிறது. தபால்காரர் வருகிறார். கடிதங்களுடன் டிபன் கேரியரையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார். “என் கணவர் ரவீந்திரன் நாயர். இந்த ஊர் போஸ்ட்மேன்” என்கிறார். மலையாள மண் ஆச்சர்யங்கள் நிறைந்தது!
ராஜலட்சுமி அழைத்துச் சென்ற இடம் பஞ்சாயத்து அரசு மருத்துவமனை. நாம் சென்றபோது மதியமாகிவிட்டதால் பார்வையாளர்கள் இல்லை. அது கிராமப் பஞ்சாயத்து மருத்துவமனை போல இல்லை. பெரியதாக, படுசுத்தமாக இருக்கிறது. மருத்துவமனையை சுற்றிக்காட்டினார்கள். நம்மூர் அரசு மருத்துவமனைகளுடன் மனம் இயல்பாக ஒப்பிடத் தொடங்கியது.
ஊழல், லஞ்சம், அலட்சியம், பாரமரிப்பு இல்லாமை, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் போதாமை, நோயாளிகளை மரியாதையின்றி நடத்துவது என நம்மூர் மருத்துவமனைகளின் அவலங்கள் கண்முன் காட்சிகளாக வந்துபோகின்றன. உண்மையில் மனம் வலித்தது. ஆதங்கத்தின் உச்சம்... ஆத்திரத்தின் உச்சம்... இயலாமையின் உச்சம் அந்த வலி. சூழல், சுத்தம், சுகாதாரம், நிர்வாகம், வரவேற்பு, சிகிச்சை, தரம் எதையுமே நம்மூர் மருத்துவமனைகளுடன் ஒப்பிட இயலவில்லை. சொல்லப்போனால் அவற்றின் அருகில் நெருங்க முடியாது நமது அரசு மருத்துவமனைகள்.
கிட்டத்தட்ட நமது நகராட்சியில் இருக்கும் அரசு பொது மருத்துவமனை அளவுக்கு இருக்கிறது கிராமப் பஞ்சாயத்து மருத்துவமனை. பெரியதாக ஐந்தாறு கட்டிடங்கள் இருக்கின்றன. இருக்கைகளுடன் அழகான வரவேற்பறை இருக்கிறது. இனிமையாக வரவேற்று அமர வைக்கிறார்கள். வரவேற்பறை தொடங்கி வார்டுகள் வரை படுசுத்தமாக வைத்திருக்கி றார்கள். தொலைக்காட்சி, கண்காணிப்பு கேமரா இருக்கிறது. நோயாளிகளுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு, வரிசைக்கிரமமாக ஒலிப்பெருக்கியில் அழைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். ஓ.பி. சீட்டு ஓரிடத்தில், சிகிச்சை ஓரிடத்தில், மாத்திரைகள் ஓரிடத்தில் என்று அலைக்கழிப்பு கிடையாது. வரவேற்பறையில் ஓ.பி. சீட்டு அளிக்கிறார்கள். சிகிச்சையும் மருந்து களும் மருத்துவர் அறையில் தருகிறார் கள். உள்நோயாளிகள் வார்டில் குளிர் சாதன வசதி செய்திருக்கிறார்கள். வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு தனி வார்டு, உள்நோயாளிகள் சிகிச்சைக்கு தனி வார்டு இருக்கிறது. தயாராக நிற்கிறது ஆம்புலன்ஸ் வாகனம்.
ஒரு கிராமப் பஞ்சாயத்து மருத்துவமனையில் ஒரு பொது மருத்துவர், ஒரு ‘பாலியேட்டிவ் கேர்’ (Palliative care) மருத்துவர் என இரு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ‘பாலியேட்டிவ் கேர்’ என்பது கேரளத்தில் செயல்படுத்தப்படும் நீண்டகால, நிரந்தர நோய்களுக்கான தொடர் சிகிச்சை சிறப்புத் திட்டம். இதைப் பற்றி தனியாக பார்ப்போம். மருத்துவர்களைத் தவிர, இரண்டு பிஸியோதெரபிஸ்ட், நான்கு செவிலியர்கள், இரண்டு மருந்தாளுநர்கள், இரண்டு பரிசோதனைக் கூட உதவியாளர்கள், இரண்டு சுகாதார ஆய்வாளர்கள், நான்கு இளநிலை சுகாதார ஆய்வாளர் கள், நான்கு பொது உதவியாளர்கள், இரண்டு ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். சுகாதாரப் பணியாளர்கள் தனி. ஆக, ஒரு கிராமப் பஞ்சாயத்து மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட சுமார் 20-க்கும் அதிகமான பணியாளர்கள் இருக்கிறார்கள்.
மருத்துவமனைக்கு தினசரி 70 முதல் 100 நோயாளிகள் வரை வருகிறார்கள். ஓ.பி. சீட்டுக்கு மட்டும் ஒரு ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள். சிகிச்சை, மருந்துகள் அனைத்தும் இலவசம். அறுவை சிகிச்சை மற்றும் பிரசவம் தவிர்த்து அனைத்து வகை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு ஒன்பது மாதங்கள் வரை தொடர் சிகிச்சை, ஆலோசனைகள், ஊட்டச் சத்து மருந்துகள் வழங்கப்படுகிறது. பக்கவாதம், புற்றுநோய், முதுகுத்தண்டு சிகிச்சை, இதயநோய்களுக்கு நவீன சிகிச்சை முறைகளைக் கையாள்கிறார்கள். உதாரணத்துக்கு, புற்றுநோய்க்கு சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு மட்டும் கிளிமானூர் பஞ்சாயத்து மருத்துவமனைக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
தனியாரிடம் நன்கொடை வாங்கி இசை மூலம் பிஸியோதெரபி அளிக்கிறார்கள். பரிசோதனைக் கூடத்தில் ரத்தம், சிறுநீர், கொழுப்பு உள்ளிட்ட அனைத்து வகை பரிசோதனைகளும் அதிகபட்சம் ரூ.40 கட்டணத்தில் செய்து தருகிறார்கள். ஒவ்வொரு சனிக்கிழமை காலை யிலும் நோயாளிகள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது. மருத்துவமனை தொடங்கி கிராமத் தின் முக்கிய பகுதியில் நன்கொடை கேட்டு 100 சிறு பெட்டிகள் வைத் திருக்கிறார்கள். அதில் சேகரமாகும் நன்கொடை மருத்துவமனையின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப் படுகிறது.
இவை தவிர, இந்தப் பஞ்சாயத்து மருத்துவமனையின் கீழ் கிளிமா னூர் பஞ்சாயத்தில் கிளிமானூர், ஆரூர், புதுமங்கலம், முளைக்காலாத்துக் காவு ஆகிய நான்கு இடங்களில் உப மருத்துவ மையங்கள் இருக்கின்றன. காலை 9 முதல் 4 வரை அவை செயல்படுகின்றன. அங்கு இளநிலை பொது சுகாதார செவிலியர் ஒருவர், இரு மையங்களுக்கு ஒரு இளநிலை சுகாதார ஆய்வாளர் மற்றும் ‘ஆஷா’ (Accredited Social Health Activist) தன்னார்வலர் பணியாளர்கள் இருவர் இருக்கிறார்கள். உப மருத்துவ மையங்களில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மதியம் 2 - 4 மணிக்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து வரும் மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகிறார்கள். ஒவ்வொரு வியாழன் கிழமை மதியம் 2 - 4 மணிக்கு ஆயுட்கால நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகிறார்கள். இவை தவிர, பஞ்சாயத்தின் கீழ் ஒரு ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் ஒரு ஹோமியோ மருத்துவமனை இருக்கின்றன.
பஞ்சாயத்து மருத்துவமனை மருத்துவர்களுக்கு மாநில அரசின் சுகாதாரத் துறை ஊதியம் அளிக்கிறது. ஆனாலும், மருத்துவர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டவர்கள். மருத்துவர்களின் வருகைப் பதிவேடு, விடுப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் கிராமப் பஞ்சாயத்தின் சுகாதாரக் குழு கண்காணிக்கும். சுகாதாரக் குழுவின் தலைவராக கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் இருப்பார். இரு செவிலியர்களின் ஊதியத்தை பஞ்சாயத்து நிர்வாகமே வழங்குகிறது. இதர பணியாளர்களின் ஊதிய செலவில் 50 சதவீதத்தை கிராமப் பஞ்சாயத்து ஏற்றுக்கொள்கிறது.
மருத்துவமனையில் மட்டுமில்லை; வீடு தேடி வந்தும் சிகிச்சை அளிக்கிறார்கள். நாளை பார்ப்போம்!
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago