கால்பந்து வீராங்கனை இறந்த விவகாரத்தில் தலைமறைவு - அரசு மருத்துவர்களை தீவிரமாக தேடும் தனிப்படை

By செய்திப்பிரிவு

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 2 அரசு மருத்துவர்களை, தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியாவுக்கு (17), சமீபத்தில் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கால் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலி குறையாததால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கால் அகற்றப்பட்ட நிலையில், அவர் கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார்.

பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைபாடே இதற்கு காரணம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அறிக்கை அளித்ததன் அடிப்படையில், மருத்துவர்கள் பால்ராம்சங்கர், சோமசுந்தர் ஆகிய 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், 2 மருத்துவர்கள் மீதும் பெரவள்ளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு 2 மருத்துவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘‘இந்த வழக்கில் போலீஸார் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். டாக்டர்களை கைது செய்வதற்கு தடை விதிக்க முடியாது’’ என்று உத்தரவிட்டார்.

முன்ஜாமீன் வழங்கப்படாததால், மருத்துவர்கள் உட்பட அறுவை சிகிச்சையின்போது உடன் இருந்த மருத்துவ உதவியாளர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 2 அரசு மருத்துவர்களும் தலைமறைவாக உள்ளனர். கொளத்தூர் துணை காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து, அவர்களை தீவிரமாக தேடிவருவதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மருத்துவக் குழுவிடம், பிரியா உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீஸார் கடிதம் அனுப்பினர். இதுதொடர்பான அறிக்கையை காவல் துறையிடம் அந்த குழு சமர்ப்பித்துள்ளது. ‘‘இதில் சில சந்தேகங்கள் உள்ளன. அதுபற்றி மருத்துவக் குழுவினரிடம் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவிக்கும் விளக்கத்தை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE