சென்னை: தமிழக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாருமாகிய எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," அசைவ பிரியர்களுக்காக ஆடு, கோழி வெட்டப்படுவது போல், மனிதர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்படுவது விடியா திமுகவின் காட்டாட்சியில் நாள்தோறும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று (18-11-2022) காலை, சென்னை எழும்பூர் காவல்நிலைய வாசலிலேயே, விக்கி என்ற விக்னேஷ் என்ற வாலிபர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை காவல் நிலையத்தில் இருந்த போலீஸார் சிசிடிவி கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று செய்திகள் வருகின்றன.
சாலையில் செல்லும் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது வெட்கக் கேடானதாகும். திமுக ஆட்சிக்கு வந்தபின் போதைப் பொருட்கள் விற்பவர்கள், சமூக விரோதிகள், தீவிரவாதிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் எல்லாம் லைசென்ஸ் பெற்றதுபோல் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நேற்றுக் காலையில் அரங்கேறிய வாலிபர் படுகொலை மூலம் நிரூபணமாகியுள்ளது.
தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்பட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் கதவுகள் திறக்கப்படுகின்றன. திமுக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை பொது மேடையிலேயே, காவலர்கள் பாதுகாப்புக்காக இருக்கும் போதே, பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுகின்றனர். உதாரணமாக, நாகர்கோவில் மேயரும், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரும் பொது மேடையில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தது அனைத்து சமூக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. இதுவரை இந்த திமுக அரசு அவர் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் திருநெல்வேலியில் திமுக கவுன்சிலர் உட்கட்சிப் பிரச்சனையில் கத்தியால் குத்தப்பட்டுள்ள நிகழ்விலும் இதுவரை இந்த அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
» கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு
» மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
காவல்துறையினரின் கைகள் கட்டப்படவில்லை எனில், தவறிழைப்பவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க அரசின் கா(ஏ)வல்துறை தயங்குவது ஏன்? அதேபோல், நான் கடந்த இரண்டு பட்ஜெட் கூட்டத் தொடர்களிலும் பேசும்போது, தமிழகத்தில் நடைபெற்ற பல போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வழிபறி சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்டு பேசினேன். குறிப்பாக, தனியாக வசிக்கும் வயதான முதியவர்கள் மீது தொடுக்கப்படும் கொலைவெறி தாக்குதல்களையும் குறிப்பிட்டு, தமிழக மக்கள் பாதுகாப்பாக வாழ தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதுகுளத்தூரில் 67 வயதான காந்தி என்பவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து, 18 சவரன் நகை கொள்ளை, அருப்புக்கோட்டையில் சங்கரபாண்டியன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகள் படுகொலை, செங்கல்பட்டு கடப்பாக்கம் அருகே 66 வயதான தேவகி என்பவர் நகைக்காக படுகொலை, மயிலாப்பூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தூங்கிக்கொண்டிருந்த முதியவரை அடித்து கொன்று பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை, செப்டம்பர் மாதத்தில் போளூர், புலிவானந்தால் கிராமத்தை சேர்ந்த 85 வயது காசியம்மாளை பணம் நகைக்காக குத்தி கொன்றுள்ளனர். அதேபோல், திருப்பத்தூர் அருகே உயர்நிலை பள்ளி ஆசிரியை ரஞ்சிதம் என்பவர் 10 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி இந்த திமுக ஆட்சியில் தனியாக வாழும் முதியவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது.
கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல்நிலையம் எதிரே ஒரு கொலை, மாடம்பாக்கம் ஊராட்சித்தலைவர் படுகொலை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை நான் சட்டமன்றத்தில் பேசும்போதும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டி அளிக்கும் போதெல்லாம் எடுத்து கூறி வருகிறேன். மேலும், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன என்றும், அதிமுக அரசில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதலிடம் பெற்றதையும் குறிப்பிட்டு, இந்த திமுக ஆட்சியில் காவல்துறை ஏவல்துறையாக நடத்தப்படுவதன் விளைவாக, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பின்னடைவு பெற்றுள்ளதையும் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இந்த அரசு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல, மத்திய உளவுத்துறை அவ்வப்போது வழங்கும் முன்னெச்சரிக்கைகளையும் காற்றில் பறக்கவிடுகிறது. இதில் ஒன்றுதான் தீபாவளிக்கு முன் கோவையில் நடந்த கார் - சிலிண்டர் குண்டு வெடிப்பு நிகழ்வு. நேற்று சென்னை எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பை வகிக்கும் திமுக முதலமைச்சர் ஸ்டாலின் தான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை தடையில்லாமல் நடைபெறுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் ஆளும் கட்சியினரின் துணையுடன் நடைபெறுகிறது என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.
இதே காவல்துறைதான் எங்களுடைய ஆட்சி காலத்திலும் மிகச் சிறப்பாக பணிபுரிந்து, இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதன்மையான மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றது. எனவே, நான் ஏற்கனவே பலமுறை சட்டமன்றத்திலும், எனது அறிக்கைகளின் வாயிலாகவும், பேட்டிகளின் மூலம் குறிப்பிட்டவாறு, இனியாவது, இந்த திமுக அரசு தமிழக காவல்துறையை
சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, தமிழத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago