உள்ளாட்சி 46: கிராம மக்களுக்கு பேரிடர் மேலாண்மை, முதலுதவிப் பயிற்சி கட்டாயம்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

கறார் வகுப்பெடுக்கும் கரைகுளம் பஞ்சாயத்து... நாட்டின் முதல் கிராமப் பாடசாலை திட்டம்... கலாச்சாரத்தை கற்பிக்கிறது கலா கிராமம்!



திருவனந்தபுரம் புறநகரை ஒட்டி யிருக்கிறது அந்தக் கிராமம். உள்ளே நுழைகிறோம். எங்கோ சலங்கை ஒலிக்கிறது. நட்டுவாங்கம் தட்ட நாட்டியமாடுகிறார்கள். ‘தத்திமி… தத்திமி… தை... தக்கட தக்கட தா...’ பக்கம் நெருங்க நெருங்க பாடல்கள் தாலாட்டுகின்றன. ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைகிறோம். ராகத்துக்கு ஏற்ப கண்ணசைத்து வரவேற்கிறார் கதகளிக் கலைஞர். இசை விருந்துடன் வரவேற்கிறது கரைகுளம் கலா கிராமம்!

கேரள கலாச்சாரத்தின் குறியீடு கரைகுளம் கிராமப் பஞ்சாயத்து. கண்ணூர் மாவட்டத்தின் சர்வதேச கலா கிராமம் திட்டத்தின் முன்னோடி கரைகுளம் கிராமம். கேரளத்தில் 1997-ல் கிராமப் பாடசாலை (கிராமீன பட்னா கேந்திரம்) திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது கலா கிராமம் திட்டம். ஆனால், 1958- நேரு தொடங்கி வைத்த முதல் தலை முறை பஞ்சாயத்தின்போதே கரை குளம் கிராமப் பஞ்சாயத்து சிறப்பாக செயல்பட்டது. 1970-க்குப் பிறகு நாட்டில் முதல் தலைமுறை பஞ்சாயத்து ராஜ்ஜியம் மெதுவாக அழியத் தொடங்கியபோதும் நீடித்து நின்றது கரைகுளம். அந்தக் காலகட்டத்திலேயே இங்கே கிராம பாடசாலை திட்டம் செயல்படுத்தப் பட்டது. ‘நாடன்’ பாடல்கள் எனப்படும் நாட்டுப்புறக் கலைகள் கற்பிக்கப்பட்டன.

கரைகுளம் கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் எம்.எஸ். அனிலா. கல்லூரி காலத்தில் இருந்தே மாணவர் சங்கப் போராட்டங்களில் ஈடுபட்ட வர், முதல்முறையாக கரைகுளம் பஞ்சாயத்தின் பெண் தலைவராகி யிருக்கிறார். “1997-ல் ‘கலா கிராமம்’ திட்டம் தொடங்கப்பட்டாலும் எங்கள் கிராமத்தில் காலம் காலமாகவே பாரம்பரியக் கலைகளைக் கற்றுத் தருகிறோம். 97, 98-ல் இதற்காக தனி யாக வளாகம் கட்டினோம். இங்கே தபலா, வயலின், வாய்ப்பாட்டு, மிருதங்கம், கிடார், நாடன் பாடல்கள், கதக்களி நடனம், பரத நாட்டியம், குழு நடனம், ஓவியம் உள்ளிட்ட கலைகளைக் கற்றுத் தருகிறோம். ஆண்டுக்கு 100 குழந்தைகள் பயிற்சியை முடித்து வெளியேச் செல்கிறார்கள். தங்கும் விடுதி வசதி உண்டு. மாதம் ரூ.100 மட்டுமே கட்டணம் வசூலிக்கிறோம்.

கேரளத்தின் பிரபலமான மேடைக் கலைஞர்கள் அடிக்கடி வந்து பயிற்சி அளிக்கிறார்கள். சினிமா கலை ஞர்களும் அவ்வப்போது பயிற்சி அளிப்பது உண்டு. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழுநாளும் முன்னோட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். அதில் சிறப்பு விருந்தினர்களுடன் மாண வர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படும். எங்கள் குழுவினர் சர்வதேச மேடை நாடகங்களில் நடித் திருக்கிறார்கள். இதோ இவை எல்லாம் நாங்கள் வாங்கிய விருதுகள்தான்...” என்று அலமாரிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விருதுகளைப் பார்த்து புன்னகைக்கிறார் அனிலா.

நாட்டில் முதல்முறையாக கிராம பாடசாலை திட்டத்தைச் செயல் படுத்திய பெருமையும் கரைகுளம் பஞ்சாயத்துக்கே சாரும். தமிழகத்தில் காந்தி கிராமம் பல்கலைக்கழகம், பெரும்புதூரில் இருக்கும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டுப் பயிற்சி நிலையம் மற்றும் மறைமலை நகரில் இருக்கும் மாநில ஊரக வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் செய்யும் வேலைகளைக் கரை குளம் கிராமப் பஞ்சாயத்து நிர் வாகம் மேற்கொள்கிறது. கிராமப் பாடசாலை திட்டம் என்பது ஒரு சமூகப் பல்கலைக்கழகம். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் கல்வி நிலையம் இது. திருவிதாங்கூர் - கொச்சின் அறக்கட்டளை சட் டத்தின்wtகீழ் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு மூலம் இங்கே மூன்று பிரிவினருக்கு பல் வேறு பயிற்சிகளை அளிக்கிறார்கள்.

முதல் பிரிவினர் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள். இந்திய அரசியல் சாசனம் 73, 74 பிரிவு என்ன சொல்கிறது? உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ள அதிகாரங் கள், உரிமைகள், கடமைகள் என்ன? கிராம சபையை நடத்துவது, மக்களுடன் தொடர்பில் இருப்பது, வரி வசூலிப்பது, பொது சொத்துக்களைப் பராமரிப்பது உட்பட அனைத்து வகையான நிர்வாகப் பயிற்சிகளையும் அளிக்கிறார்கள். மாநகராட்சி மேயர் தொடங்கி பஞ்சாயத்து கவுன்சிலர்கள் வரைக்கும் பயிற்சி அளிக்கப் படுகிறது.

கதக்களி நடனம். உள்படம்: எம்.எஸ்.அனிலா

இரண்டாவது பிரிவினர், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள். இவர்கள் களப் பணியாளர்கள். கிராமத்தின் வளர்ச்சியில் பஞ்சாயத்து நிர்வாகத்துடன் இணைந்து பணி செய்வது எப்படி என்று இவர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது. பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் இவர்கள். கிராம சபைக்கு மக்களை அழைத்து வந்து உட்கார வைப்பது, இயற்கை விவசாயம், மரம் நடுதல், மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்றவற்றை பஞ்சாயத்து நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்வது எப்படி என்று தன்னார்வலர்களுக்கு இங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது.

மூன்றாவது பிரிவினர், பொது மக்கள். குறிப்பாக, குடும்ப எனப்படும் மகளிர் சுய உதவிக் குழுவினர். ஒவ்வொரு இந்திய குடிமகனும் கிராம சபை மூலம் ஜனநாயகத்தை எவ்வாறு செயல் படுத்துவது? எவ்வாறு நிர்வகிப்பது? எவ்வாறு ஆட்சி புரிவது என்னும் மக்களுக்கான அதிகாரம் இங்கே கற்றுத் தரப்படுகிறது.

ஒரு பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு-செலவு கணக்குகளை சராசரி குடிமகனும் கேட்டு வாங்கலாம்; கேள்விகள் கேட்கலாம்; பொதுப் பிரச் சினைகளை மேடைக்குக் கொண்டு வரலாம் என்கிற மக்களுக்கான உரிமைகள் சொல்லித்தரப்படுகிறது. அரசாங்கத்தின் வரிகளை முறையாக செலுத்த வேண்டியது ஏன்? பொது சொத்துக் களைப் பாதுகாப்பதில் குடி மக்களின் பங்கு என்ன என்கிற மக்க ளுக்கான கடமைகள் இங்கே கற்றுத் தரப்படுகிறது. இவை தவிர, அடிப்படை கணினி தொழில்நுட்பங்கள், இணைய ஆளுகை திட்டங்கள், விவசாயத் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய தொழில் பயிற்சிகள் ஆகியவையும் சொல்லித் தரப்படுகின்றன.

கிராமப் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், காந்திய பொருளா தாரம் ஆகிய பிரிவுகளில் நாடு முழுவதும் அழைத்துச் சென்று கள வகுப்புகள் எடுக்கிறார்கள். சராசரி குடிமக்கள் நீதிமன்றங்களை நாடுவது எப்படி என்றும் சொல்லித் தருகிறார்கள். இலவச சட்ட உதவி குறித்து வகுப்பு எடுக்கிறார்கள். பேரிடர் மேலாண்மைப் பயிற்சிகள், முதலுதவிப் பயிற்சிகள் ஆகியவை மக்களுக்கான அடிப்படை பயிற்சி கள். கரைகுளம் பஞ்சாயத்தின் ஒவ்வொரு குடிமகனும் இவற்றை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியிலேயே இதனை சொல்லித் தருகிறார்கள். கேரளம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்தும் உள் ளாட்சிப் பிரதிநிதிகள் இங்கே பயிற்சிக்காக வந்துச் செல்கின்றனர்.

கிராம மாணவர்கள் விளையாட் டுத் துறையில் சிறந்து விளங்க ‘ஆபரேஷன் ஒலிம்பியன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பஞ்சாயத் துப் பள்ளி குழந்தைகளைத் தேர்வு செய்து கால்பந்து, கூடைப் பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கிறார்கள். கரைகுளம் கால்பந்து அணிகள் தேசிய அளவில் பிரபலமானவை. கரை குளம் பஞ்சாயத்து சார்பில் நீச்சல் குளமும் உண்டு. ஆண்டுக்கு சுமார் 100 பேர் வரை இங்கே பயிற்சி பெறுகிறார்கள். வரிசையாக சொல் லிக்கொண்டே போகலாம். எல்லா வற்றுக்கும் மேலாக சிறந்த நிர்வாகத் துக்காக ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற பஞ்சாயத்து இது!

- பயணம் தொடரும்... | படம்: மு.லட்சுமி அருண்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்