தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி முடித்த வீரர்களின் நிறைவு அணிவகுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தாம்பரம் விமானப்படை நிலையத்தில், பயிற்சி முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. சென்னை, தாம்பரம் விமானப்படை நிலைய பயிற்சி மையத்தில் 841 விமானப்படை வீரர்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற்று வந்தனர். இதில், வங்கதேசம், மியான்மர், நைஜீரியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளின் விமானப்படை வீரர்கள் 7 பேரும் இடம்பெற்றனர்.

இவர்கள் கடந்த 64 வாரங்களாக பயிற்சி பெற்று வந்தனர். தற்போது பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து, பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.

தாம்பரம் விமானப்படை மையத்தின் தலைமை அதிகாரி ஏர் கமாடோர் விபுல்சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, தற்காப்புக் கலை, சைக்கிள் மூலம் சாகச நிகழ்ச்சிகள், குத்துச் சண்டை, யோகா உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர்.

பயிற்சியில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கியதற்காக ரோட்டாஷ் சிங் என்ற வீரருக்கு சிறந்த ஆல்-ரவுண்டர் கோப்பையும் சந்தீப் குமார் என்ற வீரருக்கு சிறந்த பொது சேவை பயிற்சிக்கான விருதும் யோகேஷ், சாதேவ் மற்றும் கன்ஷியாம் ஆகியோருக்கு சிறந்த டிரேடுக்கான விருதும் வழங்கப்பட்டது. இத்தகவல், பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE