பன்முகக் கலாச்சாரத்தை மாற்ற நினைத்தால் இந்தியா சிதறக் கூடும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: ''இந்திய கலாச்சாரம் பல நூறு ஆண்டுகளாக இருக்கிற பன்முகக் கலாச்சாரம். இதை ஒற்றை கலாச்சாரமாகவோ, ஒருமொழி சார்ந்ததாகவோ, ஒரு இறைவழிபாடு உள்ளதாகவோ மாற்ற நினைத்தால் எப்படி பாகிஸ்தான் இரு துண்டானதோ, அதேபோல இந்தியா சிதறக் கூடிய வாய்ப்பு ஏற்படும்'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்து தமிழ் திசை நாளிதழில் நவம்பர் 8-ஆம் தேதிய பதிப்பில் புதுமடம் ஜாபர் அலி 'சிலருக்கு மட்டும் ஏன் தீவிரவாத சிந்தனை' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வரிக்கு வரி பொருள் பதிந்த சமநிலையில் இருக்கிற நேர்மையான கருத்துகளை அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய தெளிவான பார்வை பாராட்டப்பட வேண்டியவை.

சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய சமூகத்தில் சமீபகாலங்களில் ஏற்பட்டிருக்கிற மத வெறுப்பு, புரிதலின்மை இவைகளைப் பற்றிய தெளிவான கருத்துகள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. 'எல்லா சமூகங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களை தீவிரவாதிகளாக குறிப்பிடுகிறோமேயொழிய மததீவிரவாதிகளாகக் குறிப்பிடுவதில்லை. உதாரணமாக, மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி ஆகியோரின் படுகொலைகள் எல்லாம் ஒரு கொலையாக பார்க்கப்படுகிறதே தவிர, அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது அது ஒரு மிகப்பெரிய தாக்குதலாக நிகழ்த்தப்படவில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் விஷயத்தில் இந்த பார்வை மாறுபடுகிறது. இது சரிதானா ?' என்கிற கேள்வி அவரால் எழுப்பப்படுகிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டியது ஜனநாயக உணர்வுமிக்க, இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கக் கூடிய, பெரும்பான்மை மக்கள் வாழ்கிற இந்திய சமூகத்திற்கு உண்டு.

'மும்பையிலும், கோவையிலும் ஏற்பட்ட வன்முறைகள் வழிதவறிய சில இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக கோவை குண்டு வெடிப்பில் இறந்து போன ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட அந்த பகுதியில் உள்ள ஜமாத் முன்வரவில்லை. முஸ்லிம் சமூகத்திற்காக பாடுபடுவதாக சொல்லி அரங்கேற்ற முயன்ற ஒரு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முஸ்லிம் சமூகம் இக்காரியத்தில் ஈடுபட்டவர்களை முழுமையாக வெறுக்கிறது' என்பது போன்ற கருத்துகளை அவர் வெளியிட்டிருக்கிறார். இவைகள் எல்லாமே ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான காரணங்கள்.

எல்லா சமூகங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை அவர்கள் சார்ந்த பெரும்பான்மை சமூகம் அங்கீகரிப்பதில்லை என்பது தான் உண்மை. இந்தியாவை பொறுத்தவரை சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு, பின்பு ஏற்பட்டிருக்கிற சிந்தனை மாற்றங்கள் அபரிமிதமானவை. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பது என்று முடிவு செய்தபிறகு அதனை ஒரு முழுமையான நிலப்பரப்பாக கொடுக்கக் கூடாது, குறைந்தது மூன்று பகுதிகளாக பிரித்து தர வேண்டுமென்று விரும்பினார்கள். அப்பொழுது தான் வருங்காலத்தில் இந்தியா வலிமையாகவோ, ஒரு வல்லரசாகவோ இருக்காது என்பது அவர்களது கணக்கு. அதில் அவர்கள் ஓரளவு வெற்றி பெற்றார்கள். ஜின்னாவின் முயற்சியால் பாகிஸ்தான் தோன்றியது. அப்பொழுது ஏற்பட்ட கலவரங்கள், பிணக்குகள், சித்தரவதைகள், மனிதாபிமானமற்ற செயல்கள் இவைகளை மனித நெஞ்சம் ஏற்றுக் கொள்ளாது.

ஆனால், மகாத்மா காந்தி, கான் அப்துல் கபார் கான், ஜவஹர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத், ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற எண்ணற்ற தேசியத் தலைவர்கள் ஒரு பாலமாக நின்று இந்த அதிபயங்கர வன்முறைக்கு ஒரு முடிவு கட்டினார்கள். விரைந்து சுமூகத்தை உருவாக்கினார்கள். அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் வசித்த இந்துக்களும், இந்திய முஸ்லிம்களும், சீக்கியர்களும், இன்னும் பிற மனிதாபிமானம் மிக்கவர்களும் மத, வன்முறைத் தீயை அணைத்தார்கள். மக்களுக்கு நல்ல போதனைகளை வழங்கினார்கள். சமூக மேம்பாட்டிற்கு உதவினார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்களின் சதவிகிதம் 10 என்றால், வன்முறைக்கு எதிராக செயல்பட்டவர்களின் சதவிகிதம் 90. அந்த மாபெரும் இந்திய கலாச்சாரத்தை தான் உலகமே பார்த்து வியந்தது.

அந்தக் காலக்கட்டத்தில் காஷ்மீரத்தில் கூட ஒர் அற்புதம் நிகழ்ந்தது. 99 சதவிகிதம் இஸ்லாமியர்கள் வாழ்கிற அந்த மாநிலம் ஜனநாயக முறைப்படி ஜவஹர்லால் நேரு அவர்களின் உறுதிமொழியை ஏற்று, மகாத்மா காந்தியின் மீது வைத்த நம்பிக்கையினால் இஸ்லாமிய பாகிஸ்தானில் இணையாமல் ஜனநாயக இந்தியாவில் வந்து இணைந்தார்கள். இந்த புவிப் பந்தில் இருக்கிற ஒரு அழகிய நிலப்பரப்பை கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி இந்தியாவுடன் சேர்த்த பெருமை ஜவஹர்லால் நேரு அவர்களைச் சாரும். காஷ்மீரத்து இஸ்லாமியர்கள் விரும்பியிருந்தால் மவுண்ட் பேட்டன் பிரபு காஷ்மீரை பாகிஸ்தானுக்கு வழங்கியிருப்பாரே யொழிய இந்தியாவிற்கு வழங்கியிருக்க மாட்டார். அந்த சூழலில் அந்த மக்களுக்கு நாம் சில சலுகைகளை கொடுத்தோம். ஒரு சில சலுகைகளை கொடுத்து ஒரு மாபெரும் நிலப்பரப்பை எடுத்துக் கொள்வது சாதாரண விஷயமல்ல. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அதை குறை சொல்கிறார்கள்.

நம்மோடு சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் இன்றைக்கு இரண்டு நிலப்பரப்பாக இருக்கிறது. ஆனால், அங்கிருக்கிற மதம் ஒரே மதம். அதேநேரத்தில் இந்தியாவில் பல்வேறு மதங்கள் இருந்தும், இந்தியாவினுடைய நிலப்பரப்பு ஒன்றாகவே இருக்கிறது. அதற்கு யார் காரணம்? ஜவஹர்லால் நேருவும், அவருடைய அற்புதமான ஆட்சிமுறையும் தான் காரணம். காஷ்மீரத்து இஸ்லாமியர்கள் உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டனவர்கள். இந்தியாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டவர்கள். எல்லா நாடுகளிலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கிற சில பிரிவினைவாத போக்குகள் காஷ்மீரத்திலும் உண்டு. ஆனால், அவர்கள் தான் காஷ்மீரத்தின் உண்மையான சக்திகள் என்று கருதக் கூடாது.

புதுமடம் ஜாபர் அலி கூறுகிறார். 'மதவெறியை எதிர்க்க வேண்டிய பொறுப்பை மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் கட்டுவது மதச்சார்பற்ற சக்திகளே'. ஏறக்குறைய அது உண்மையான கூற்று. ஏனென்றால், எந்தவொரு கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களுக்கும் பிரச்சினைகள் வருகிற போது பிற சகோதரர்கள் தான் உதவ வேண்டும். ஆனால், இன்றைய அரசியல் உலகில் வலிமையான குரல்கள் ஒலிப்பதில்லை.

இஸ்லாமிய சமூகத்தில் வழிதவறிய சில இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறையை தத்துவமாக கையில் எடுத்து பல பெரிய சேதங்களை சமூகத்தில் உருவாக்குவதை இஸ்லாமிய தலைவர்கள் விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் அழுத்தமாக கண்டனம் தெரிவிக்க தயங்குகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய குறைபாடு. அதற்கு காரணம், வன்முறையாளர்கள் அல்லது தீவிரவாதிகள் தங்களுடைய மதப் பற்றை குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். கான் அப்துல் கபார் கான் அவர்களோ, அபுல் கலாம் ஆசாத் அவர்களோ முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோஷத்தை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. காரணம், இந்திய ஒற்றுமையின் மீது அளப்பரிய நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. இன்றைய இஸ்லாமிய தலைவர்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தாலும் கூட, புதுமடம் ஜாபர் அலியைப் போல அச்சமின்றி அவர்கள் கருத்துகள் சொல்வதில்லை.

இந்திய சமூகத்திலும் அந்த குறை இப்பொழுது வந்திருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, ஜனநாயக உணர்வுமிக்க தலைவர்கள் வருத்தமடைந்தார்கள், கண்டனம் எழுப்பினார்கள். ஆனால், அதற்கு பிறகு ஒரு தீர்வை ஏற்படுத்த அவர்கள் தயங்கிப் போனார்கள் அல்லது அச்சமடைந்தார்கள். அது நம் சமூகத்தில் இருந்த மதவெறியர்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுத்தது. ஆனால், அன்றைக்கு மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்தால் இந்திய மக்களே என்னோடு வாருங்கள், நம்முடைய சகோதரர்களுடைய வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டு விட்டது. நாம் அதை மீண்டும் உருவாக்குவோம் என்று சொல்லி வந்திருப்பார். அதுதான் காந்திய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம்.

ஒன்று மட்டும் உறுதி. இந்திய கலாச்சாரம் என்பது பன்முக கலாச்சாரம். பல நூறு ஆண்டுகளாக இருக்கிற கலாச்சாரம். இதை ஒற்றை கலாச்சாரமாகவோ, ஒருமொழி சார்ந்ததாகவோ, ஒரு இறைவழிபாடு உள்ளதாகவோ மாற்ற நினைத்தால் எப்படி பாகிஸ்தான் இரு துண்டானதோ, அதேபோல இந்தியா சிதறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். நம்முடைய நாட்டில் தோன்றிய மாபெரும் தலைவர்கள் தங்கள் மதத்தின் மீதும், தங்கள் கடவுள் மீதும், தங்கள் மொழியின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தாலும் அவற்றை பிறர் மீது திணிக்காமல் இருந்தார்கள். அதுதான் இந்தியாவினுடைய தேசியப் பண்பு, தேசிய கலாச்சாரம். நிச்சயமாக நாம் அந்தப் பாதையில் தான் இடர்பாடின்றி எப்போதும் நடக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து'' என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்