சென்னை: கால் அகற்றப்பட்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டுக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது பெற்றோரிடம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார். மேலும், அவர்களுக்கு குடியிருப்பு மற்றும் சகோதரருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதி மகள் பிரியா (17), சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்தவமனையில் கடந்த 7-ம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், கால் வலி, வீக்கம் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வலது கால் அகற்றப்பட்டது.
பெரியார் நகர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்ததால், விசாரணை நடத்த சுகாதாரத் துறை குழு அமைத்தது. இதற்கிடையில், பிரியா கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, கவனக்குறைவாக செயல்பட்டதாக மருத்துவர்கள் கே.சோமசுந்தர், ஏ.பல்ராம் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பிரியாவின் தந்தை ரவிக்குமார், ‘‘அறுவை சிகிச்சையின்போது பிரியாவின் காலை பெரிய அளவுக்கு கிழித்துள்ளனர். ரத்தம் அதிகமாக வெளியேறியதால், மூட்டுப் பகுதியை இறுக்கி கட்டியுள்ளனர். அங்கு போதிய மருந்துகள் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும்’’ என்றார்.
இதற்கிடையில், பிரியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு நடைபெற்றது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்ததும், மருத்துவர்கள் இருவரும் தலைமறைவாகினர். இதற்கிடையில், மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரன், இந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டுக்குச் சென்றார். அவரது பெற்றோர், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், நிவாரணமாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
» காமராஜர் பல்கலை.,யில் தொல் மரபியல் ஆய்வகம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்
» எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள்: ஆறு பேரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு
மாணவியின் பெற்றோரிடம் "உங்களுக்கு ஆதரவாக என்றும் நாங்கள் இருப்போம். உங்கள் தேவைகள் குறித்து எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம்" என்று முதல்வர் கூறினார். மேலும், மாணவியின் சகோதரருக்கு தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கான ஆணை, அவர்கள் குடியிருக்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கவுதமபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்புக்கான ஆணை ஆகியவற்றையும் முதல்வர் வழங்கினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி, சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் உடனிருந்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் உயிரிழப்பு தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும், நம் மாநில விளையாட்டுத் துறைக்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அரசு அனைத்து வழிகளிலும் உதவும். இவை அனைத்தும் பிரியாவின் உயிருக்கு ஈடாகாது’’ எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago