சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பரிக் ஷன் அறக்கட்டளை’ எனும் அமைப்பு அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களிடையே பல்வேறு அறிவியல் செயல்முறை விளக்கங்களைச் செய்துகாட்டி, அவர்களிடையே அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உதவி வருகிறது.
சென்னையில் உணவுப் பொருள் தர நிர்ணய பரிசோதனைக் கூடம் நடத்தி வருபவர் பசுபதி. நுண்ணுயிரியல், விலங்கியல் மற்றும் உணவுப் பொருள் தரம் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 15 முனைவர் பட்டங்களை பெற்றுள்ள இவர், முறையான அறிவியல் ஆய்வுக்கூட வசதி இல்லாத அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும் என கருதினார்.
இதற்காக 2009-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில அரசுப் பள்ளிகளுக்குச் சென்று நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில அறிவியல் உண்மைகளை எளிய பரிசோதனைகள் மூலம் மாணவர்களிடம் விளக்கினார். மாணவர்களிடையே கிடைத்த வரவேற்பு மற்றும் ஆர்வத்தைப் பார்த்து இந்த செயல்பாட்டை தொடரவும், மேலும் விரிவுபடுத்தவும் விரும்பினார்.
சிலரது உதவியுடன், பரிச்சயம் என்ற பொருள் கொண்ட ‘பரிக் ஷன் அறக்கட்டளை’ உருவானது. இந்த அறக்கட்டளைக்கு 2 வேன்கள் வாங்கப்பட்டன. ‘விஞ்ஞான ரதம்’ எனும் பெயர் கொண்ட இந்த வேன் களில் ஒரு திட்ட இயக்குநர் மற்றும் 4 ஆசிரியர்கள் கொண்ட குழு கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தை கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் பயணம் செய்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 9 லட்சம் மாணவர்களைச் சந்தித்து அறிவியல் செயல்விளக்கங்களைச் செய்து காண்பித்துள்ளது.
இந்த வேனில், அறிவியல் உபகரணங்களுடன் ஜெனரேட்டர், திரைப்படங்களை காட்சிப்படுத்தும் திரைகளுடன் கூடிய புரொஜெக்டர் கருவி, கூடாரம் ஆகியவையும் உள்ளன. கிராமப்புற பள்ளிகளில் கிடைக்கும் வசதியைக் கொண்டு திறந்தவெளியில்கூட செயல்முறை வகுப்புகளை இவர்கள் நடத்து கின்றனர்.
அன்றாட வாழ்வில் நிகழும் பல் வேறு நிகழ்வுகளை எளிமையான அறிவியல் சோதனைகள் மூலம் நேரடியாக செய்து காட்டி மாணவர்களுக்கு விளக்குகின்றனர்.
செயல்முறை வடிவில் விளக்கப் படுவதால் விஷயங்களை அறிவி யல்பூர்வமாக எளிதில் புரிந்து கொள்வதுடன், மக்களுக்குப் பய னுள்ள எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் எனும் ஆர்வம் மாணவர்களிடம் உண்டாகிறது.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் பரிக் ஷன் திட்ட இயக்குநர் அறிவரசன் கூறியபோது, “எங்களிடம் சுமார் 1,200 அறிவியல் செயல்முறை விளக்க சோதனைகள் உள்ளன. மேலும், இது தொடர்பான ஏராளமான ஒளிப்படங்களும் உள்ளன. ஏப்ரல், மே ஆகிய 2 மாதம் சென்னையில் அறிவியல் பயிற்சி முகாம் நடத்துகிறோம். இதற்கு கட்டணம் உண்டு. இந்த முகாம் மூலம் வசூலாகும் தொகையைக் கொண்டு வருடத்தில் 10 மாதங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக செயல்முறை பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம்.
நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வக வசதி கொண்ட தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசுப் பள்ளிகளைத் தேடிச்சென்று இலவச செயல்முறை வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதன் மூலம், மக்களுக்கு பயனுள்ள எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டுவதே எங்கள் நோக்கம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago