தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட இளம் வீராங்கனை உயிரிழப்பு - தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்தார். கவனக்குறைவாக செயல்பட்ட 2 அரசு மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் குடும்பத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

சென்னை வியாசர்பாடியில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரவிக்குமார் - உஷாராணி தம்பதியின் மகள் பிரியா(17). சென்னை ராணிமேரி கல்லூரியில் பிஎஸ்சி உடற்கல்வி படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவர், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வந்துள்ளார். இவருக்கு 3 சகோதரர்கள் உள்ளனர்.

மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை: இந்த நிலையில், சமீபத்தில் பயிற்சியின்போது, பிரியாவின் வலது கால் மூட்டுபகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பரிசோதனையில் கால் மூட்டு பகுதியில் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கடந்த 7-ம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சைசெய்தனர். மறுநாள் காலில் அதிக வீக்கம்,வலி இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பரிசோதனையில், அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதும், ரத்த நாளங்கள் பழுதாகியிருப்பதும் தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரது வலது கால் பகுதியை அகற்றினர்.

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததே இதற்கு காரணம் என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பாதிப்புகளுக்கான காரணங்கள் குறித்து அக்குழுவினர் விசாரணை நடத்தி, அரசிடம் கடந்த 13-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வலது கால் அகற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுவந்த மாணவியை பல்வேறு துறை மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி பிரியா நேற்று காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உடல் உறுப்புகள் பாதிப்பு: ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டதால், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவிபிரியாவை பல்வேறு மருத்துவ நிபுணர்கள், மூத்த மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சைகள் அளித்து வந்தனர். ஆனால், அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டு அவர் இறந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் அலட்சியம், கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்று உயர்நிலை குழு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவசரசிகிச்சை பிரிவு மருத்துவர் கே.சோமசுந்தர், எலும்பியல் மருத்துவர் ஏ.பால் ராம்சங்கர் ஆகிய 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். மாணவி உயிரிழந்த நிலையில், 2 பேரும் தற்போது இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். காவல் துறையில் புகார் கொடுத்து சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.

முதல்வரிடம் அந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக் கூறி உடனடியாக தமிழக அரசின் நிவாரணமாக ரூ.10லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவியின் சகோதரர்கள் 3 பேரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்கவும் முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி பிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறியபோது, “மகளுக்கு கால் வலிஇருந்ததால், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு வாரம் சிகிச்சைக்காக வைத்திருந்தனர். காப்பீடு திட்டத்தின் ஒப்புதல் வந்த பிறகுதான் அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்றனர். பின்னர், அறுவை சிகிச்சை செய்து பெரிய அளவில் காலைகிழித்துள்ளனர். ரத்தம் அதிகமாக வந்ததால், முட்டி பகுதியை இறுக்கமாக கட்டியுள்ளனர். ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்திருந்தனர். அதன்பிறகு வேறு வார்டுக்கு மாற்றினர்.

மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்

அங்கு போதுமான மருந்துகள் இல்லை. இதனால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதால், இங்கு அழைத்து வந்தேன். சாதாரண அறுவை சிகிச்சை என்பதால்தான், பெரியார் நகர் மருத்துவமனைக்கு முதலில் சென்றோம். அப்போதுகூட என் மகள் நடந்துதான் வந்தாள். அடுத்து கால் போனது. இப்போது என் மகளே போய்விட்டாள். சம்பந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றமருத்துவர்களுக்கு பயம் வரும்” என்று வேதனையுடன் கூறினார்.

இதற்கிடையில், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்யவலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள், சக விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் மருத்துவமனையில் கோஷம் எழுப்பினர்.

உடல் ஒப்படைப்பு

இதனால், பரபரப்பான சூழ்நிலை உருவானது. அவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்திய போலீஸார், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்து, அவர்களை சமாதானப்படுத்தினர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, மாணவியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

பின்னர், மாணவியின் உடல், அவரதுஇல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், திருவிக நகர்திமுக எம்எல்ஏ தாயகம் கவி, உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறையில் இறுதிச்சடங்கு நடை பெற்றது.

போலீஸில் புகார்

இந்நிலையில், மாணவியின் தந்தை ரவிக்குமார் கொடுத்த புகாரின்பேரில், பெரவள்ளூர் போலீஸார் சந்தேக மரணம்(ஐபிசி 174) என்ற பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பானஆவணங்கள் மருத்துவ வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. சிகிச்சை, மரணம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து, அறிக்கையை அவர்கள் காவல் துறையிடம் கொடுத்த பிறகு, குற்றத்தின் தன்மையை பொருத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்