பருவமழை காலங்களில் மழைநீர் தேக்கம்; நீரியல் வல்லுநர்கள் மூலம் நிரந்தரத் தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்/திருவள்ளூர்: அசாதாரண சூழ்நிலைகளில் கூட மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேறுவதற்கு ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், நீரியல் வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குன்றத்தூர் வட்டத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம், பரணிபுத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. உயர் குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் அகற்றும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு, துரிதமாக நீரை வெளியேற்றவும், மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கு தேங்கியுள்ள நீர், மழைநீர் வடிகால் மூலம் அடையாறை சென்றடைகிறது. இந்த வடிகால் கொள்ளளவு குறைவாக இருப்பதால் அதிக நீர் வெளியேற தாமதம் ஆகிறது. இதனால் கொளப்பாக்கம், பரணிபுத்தூர், மாங்காடு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த உபரி நீரை அகற்ற உயர் குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக 46 செ.மீ மழை பெய்துள்ளதால் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க ஐ.ஐ.டி பேராசிரியர்கள், நீரியல் வல்லுநர்களை கொண்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மழைநீரை அடையாறு ஆற்றுக்கு கொண்டு செல்லும் வழிகளையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

இந்த ஆய்வின்போது பெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இல.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாக ஆணையர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.மேலும், ஆலந்தூர் மண்டலம் முகலிவாக்கம், திருவள்ளுவர் நகரிலும், அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே சுமார் 570 ஏக்கர் பரப்பளவிலான கோவில் பதாகை ஏரி, பருவமழையால் நிரம்பி, கடந்த 3 நாட்களுக்கு மேலாக உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், கன்னடபாளையத்தில் குடியிருப்பு பகுதிகளில் ஏரியின் உபரி நீர் ஓடுவதை நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு,சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, புதிய கால்வாய், 3 சாலைகள் அமைக்க அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE