செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், பாஜக சார்பில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர் உள்ளிட்ட 32 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று திமுக அரசின் பால் விலை உயர்வு மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் சார்பில் பொன்னேரிக்கரை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

இதேபோல் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் சார்பில் வாலாஜாபாத் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.ஜெயராமன் தலைமை தாங்கினார். இதேபோல் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், ஆவடி, திருவள்ளூர், மணவாள நகர், பட்டரைபெரும்புதூர் உள்ளிட்ட 16 இடங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், அனந்தபிரியா, மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, பாஜக மாவட்ட தலைவர் அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரா, மாவட்ட பொதுச்செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என 2,000 பேர் பங்கேற்றனர்.

அதே போல், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், பெரியபாளையம், செங்குன்றம் உள்ளிட்ட 14 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜகவின் அரசு தொடர்பு பிரிவின் மாநில தலைவர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE