தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கஜா புயல்தாக்கி இன்றுடன் 4 ஆண்டுகளாகியும் வருவாய்த் துறையின் அடங்கல் பிரச்சினைக்கு இதுவரை நிவாரணம் கிடைக்காததால், தென்னை விவசாயிகள் பெரும் வேதனையடைந்து வருகின்றனர்.
2018-ம் ஆண்டு நவ.15-ம் தேதிநள்ளிரவு தொடங்கி 16-ம் தேதிஅதிகாலை வரை வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் நிலைகுலைந்து போயின. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் புயலில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.
இதனால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. தென்னை மரங்கள் சேதமடைந்தது தொடர்பாக உரிய கணக்கெடுப்பை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் முறிந்து விழுந்த தென்னைமரம் ஒன்றுக்கு ரூ.500, வெட்டுக்கூலியாக ரூ.600 என ஒரு மரத்துக்கு ரூ.1,100 நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.
அப்போது வருவாய்த் துறையினர் கிராம கணக்கான அடங்கலில், தென்னை விவசாயம் தொடர்பாக முறையாக பதிவு செய்யாமல் விட்டதால், தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், நிவாரணமும் இன்னும் கிடைக்கவில்லை. இந்த அடங்கல் பதிவை முறைப்படுத்த வேண்டும் என கடந்த 4 ஆண்டுகாலமாக தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் இதுவரைமுறைப்படுத்தாமல் இருப்பதால், உரிய நிவாரணம், சலுகைகள் கிடைக்காமல் போகின்றன என தென்னை விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.
இது குறித்து பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயி வா.வீரசேனன் கூறியது: எங்கள் பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை சாகுபடியில் ஊடுபயிராக நெல், கரும்பு, உளுந்து, கடலை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இதனால், வேளாண்மைத் துறையினரிடம் மானிய விலையில் விதைகள் வாங்க, பயிர்க்கடன் பெற ஊடுபயிராக, பயிரிடப்பட்ட பயிர்களை சுட்டிகாட்டி கடன் பெறுவது வழக்கம். ஆனால் தென்னை மரங்கள் வளர்ந்த பின்னர் ஊடு பயிர் சாகுபடி செய்ய முடியாது. தென்னைமரங்கள் மட்டும்தான் இருக்கும். ஆனால், கிராம நிர்வாக அலுவலர்கள் கள ஆய்வு செய்யாமல், விவசாயிகள் தொடக்கத்தில் வாங்கிய அடங்கலில் என்ன பயிர் செய்யப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளதோ அதைத்தான் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
அதேபோல, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் தென்னந்தோப்புகளில் வீடுகள் கட்டியிருக்கும்போது, வீடு கட்டப்பட்ட தென்னந்தோப்பு மனை என பதிவாகியுள்ளது.இதனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து காட்டியது அரசு.
இது குறித்து கஜா புயல் பாதித்த பல நாட்களுக்குப் பிறகுதான் தென்னை விவசாயிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தென்னை விவசாயிகள் ‘அடங்கல்' பதிவை திருத்துமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கஜா புயல் பாதித்து 4 ஆண்டுகளான நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையின் ‘அடங்கல்’ பிரச்சினைக்கு இனியாவது தீர்வு கிடைக்குமா என தென்னை விவசாயிகள் எதிர்பார்த்தி காத்திருக்கிறோம் என்றார்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘விவசாயிகள் கொடுத்த தகவலின்படி தான் அடங்கலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், கூடுதல் பணியை மேற்கொள்ளும்போது,கிராம உதவியாளர்கள் தரும் தகவலை பதிவு செய்து விடுவதால், இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. விரைவில் மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை பெற்று அடங்கலில் திருத்தம் செய்யப் படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago