சென்னை: “மாணவி பிரியாவை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஏன் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை? யார் அனுமதி மறுத்தது? அதற்கு யார் காரணம்? மாணவியை அங்கிருந்து திருப்பி அனுப்பியது யார்? எனவே இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உயிரிழந்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனையான 17 வயது மாணவி பிரியாவின் உடல், போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வியாசர்பாடி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவி பிரியாவின் உடலுக்கு அதிமுக சார்பில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியது: "தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையை இழந்துள்ளோம். தமிழகத்தின் சார்பில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பங்குபெற்று தமிழகத்தின் பெருமையை மாணவி பிரியா பறைசாற்றியவர். தனது காலில் ஏற்பட்ட லிகமென்ட் பிரச்சினை காரணமாக முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குதான் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்போதே அங்கு சிகிச்சைக்காக அனுமதித்திருந்தால், பிரியாவை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பியதால், பெரியார் நகரில் உள்ள புறநகர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அது திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இருக்கின்ற ஒரு மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவி பிரியாவின் கனவு தகர்ந்தது. ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையை இழக்கின்ற நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையின் உயிரை இந்த அரசு பறித்திருக்கிறது. 3 நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர், தவறு செய்திருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக பொறுப்பற்ற முறையில் பதிலளித்திருந்தார். மருத்துவம், தொழில்நுட்பம், மருந்துகள் எல்லாம் முன்னேறிய இந்த காலக்கட்டத்தில், காலில் ஜவ்வு கிழிந்த காரணத்துக்காக ஓர் உயிர் பறிபோய் இருப்பது, தமிழகத்தில் எந்தளவுக்கு மருத்துவத் துறை சீரழிந்துள்ளது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
பிரியாவின் இறப்புக்கு இந்த அரசுதான் முழு காரணம். அரசு மருத்துவமனை, புறநகர் மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருந்திருந்தால், இதுபோன்ற நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை. என் பெண்ணை கொன்றுவிட்டனர், இதுபோன்ற நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது என்ற மாணவி பிரியாவின் தாயின் அழுகுரலைக் கேட்டாவது, இந்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கூறியதைப் போல, மாணவியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஏன் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை? யார் அனுமதி மறுத்தது? அதற்கு யார் காரணம்? மாணவியை அங்கிருந்து திருப்பி அனுப்பியது யார்? புறநகர் மருத்துவமனையில் கால் அகற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிர் பிரிந்துள்ளது. எனவே, இந்த இரண்டு குற்றச்சாட்டுகளில் யார்யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனரோ, ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதனிடையே, இன்று (நவ.15) மாலை உயிரிழந்த மாணவி பிரியாவின் இறுதிச் சடங்குகள், கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago