“துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் என்பதை அரசு உணரவேண்டும்” - தமிழக பாஜக

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழக மாணவர்களின் நலன் கருதி, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசு தவறு செய்வதை உணர்ந்து, ஆளுநருக்கே அதிகாரம் என்பதை உணர்ந்து மசோதாக்களை திரும்ப பெறுவதோடு, ஆளுநருடனான மோதலை தவிர்த்து தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கு நல்ல தரமான கல்வியை வழங்க முதல்வர் ஸ்டாலின் முன்வரவேண்டும்'' என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கேரள அரசு நியமித்த மீன்வள பல்கலை துணைவேந்தர் நியமனம் செல்லாது என்றும், புதிய துணைவேந்தரை ஆளுநரே நியமிக்க வேண்டும் என்றும் அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலை மானிய விதிமுறைகளை மீறி இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது கேரள கம்யூனிஸ்ட் அரசின் முறைகேடான ஆட்சியின் அவலத்தை உணர்த்துகிறது. தங்கள் கட்சியின் அனுதாபிகளையும், தகுதி இல்லாதவர்களையும் துணை வேந்தர்களாக்கி அடுத்த தலைமுறையை சீர்குலைக்க திட்டமிட்ட கம்யூனிஸ்டுகளின் சதியை முறியடித்துள்ளது இந்த தீர்ப்பு.

அதேபோல் தமிழகத்திலும் பல பல்கலைக்கழகங்கள் குறித்த பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியை வியாபாரமாக்கி கல்விக் கூடங்களை கொள்ளையர்களின் கூடாரங்களாக்கியதே திராவிட மாடலின் சாதனை, தமிழக மக்களின் சோதனை. பல துணைவேந்தர்கள் லஞ்ச, ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையிலோ அல்லது பிணையிலோ உள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

துணைவேந்தர் பதவிக்கு பல கோடிகள், துணை போராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் பல லட்சக்கணக்கில் லஞ்சம் மாணவர்களின் அனுமதிகளில், தேர்வில், தேர்ச்சியில் முறைகேடுகள், குண்டூசியில் தொடங்கி அனைத்துப் பொருட்கள் கொள்முதல்களிலும் நிர்வாக ஊழல்கள், மோசடிகள் என அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழல் நடைபெற்று வந்துள்ளன.

தகுதியற்ற, திறமையற்ற, ஊழல் துணைவேந்தர்களின் மோசமான மற்றும் முறைகேடான நிர்வாகம்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்பதை கண்டறிந்து கடந்த சில ஆண்டுகளாக திறமையான தகுதியான துணைவேந்தர்களை பல்கலைக்கழகங்களுக்கு நியமனம் செய்யும் தமிழக ஆளுநரின் நலல முயற்சிக்கு எதிராக ஊழல்வாதிகளை, கல்வி வியாபாரிகளை நியமித்து தரமற்ற கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல தமிழக அரசு முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஊழல் எனும் சாக்கடையில் ஊறித் திளைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகங்கள், வேந்தரான தமிழக ஆளுநரின் வழிகாட்டுதலில் மாற்றம் ஏற்பட்டு எழுச்சி பெற்றுவருகிறது. ஆனால், இந்த விவகாரத்திலும் மாநில உரிமை, மொழிப்பற்று என்னும் குறுகிய மலிவான அரசியலை புகுத்தி ஊழலை தொடர்வதற்கான செயல்பாடுகளை தமிழக அரசும், திமுகவும் முன்னெடுப்பது அடுத்த தலைமுறைக்கு தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கும் மிகப்பெரும் துரோகம்.

ஆகவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசு தவறு செய்வதை உணர்ந்து, ஆளுநருக்கே அதிகாரம் என்பதை உணர்ந்து மசோதாக்களை திரும்ப பெறுவதோடு, ஆளுநருடனான மோதலை தவிர்த்து தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கு நல்ல தரமான கல்வியை வழங்க முதல்வர் ஸ்டாலின் முன்வரவேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்