வேலூர் | விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு இஸ்லாமியா அரசு மேல்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்தவர் தோல் பதனிடும் தொழிலதிபர் அப்துல்வஹாப் (55). இவர்அதே பகுதியில், புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அங்கு 30 நாட்களுக்கு முன்பு, 12 அடி ஆழத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஒன்றுக்கு சென்ட்ரிங் போட்டு அமைத்தார். இந்த தொட்டியில் 2 அடிக்கு மழை நீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தொட்டியில் சென்ட்ரிங் கட்டுமானத்தை பிரித்தெடுக்கும் பணியில், கட்டிடத் தொழிலாளிகளான பாஸ்மார்பெண்டா மலை கிராமம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன்(44) , இவரது அண்ணன் வெங்கடேசன்(50), கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு முருகேசன் (46) என 3 பேர் ஈடுபட்டனர்.

தொட்டியினுள்ளே இறங்கிய வெங்கடேசன் மற்றும் கொத்தூர் முருகேசன் ஆகியோர் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். வெங்கடேசனின் தம்பி முருகேசன், அவர்களை காப்பாற்ற தொட்டியின் உள்ளே இறங்கி, அவரும் மூச்சுத் திணறி மயங்கினார். தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு நீண்ட நாட்களாக சென்ட்ரிங் போடப்பட்டிருந்ததால், அதில் விஷவாயு உற்பத்தியாகி இருந்தது. பேரணாம்பட்டு போலீஸார், தீயணைப்பு வீரர்கள் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், வெங்கடேசன், கொத்தூர் முருகேசன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொல்லைமேடு முருகேசன் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE